கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்: தென் கொரியா மீது திடீர் தாக்குதல் நடத்திய வட கொரியா

By செய்திப்பிரிவு

பியாங்யாங்: தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தீவு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நீண்ட ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில், வட கொரியாவின் ராணுவ நடவடிக்கையால் கொரிய தீபகற்பம் பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.

200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசி வட கொரியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. எதிர்பாராத இந்த தாக்குதலால் யோன்பியோங் தீவில் உள்ள மக்கள் உடனே வெளியேற தென் கொரிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும், இந்த தாக்குதலால் பொதுமக்களுக்கோ அல்லது தென் கொரிய ராணுவத்துக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

தென் கொரிய கூட்டுப் படைத் தலைவர்களின் செய்தித் தொடர்பாளர் இந்த தாக்குதல் தொடர்பாக பேசுகையில், "இது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்து அமைதியை குலைக்கும் ஆத்திரமூட்டும் செயல்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் நீடித்து வரும்நிலையில், அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு கொண்ட தென் கொரியா அண்மையில் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சி மேற்கொண்டது. இந்த போர்ப்பயிற்சி நடைபெற்ற சில நாட்களில் வட கொரியா தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு தாய் மக்களுக்குள் நடக்கும் மோதல்.. ஒரே மொழி, ஒரே இனத்தைக் கொண்ட இரு கொரிய நாடுகளுக்கு இடையே என்னதான் பிரச்சினை என்று வரலாற்றுப் பக்கங்களைத் தேடினால் இரண்டாம் உலகப் போரில் இருந்து கதை வருகிறது. அப்போது, ஒன்றுபட்ட கொரியாவை ஜப்பான் தனது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த பின்னர், 1945-ல் கொரியா விடுதலை பெற்றது.

கொரியா விடுதலை பெற்ற வேளையில் அதன் வட பகுதியில் சோவியத் நாடும், தென் பகுதியில் அமெரிக்காவும் ஆதிக்கத்தைச் செலுத்தின. இரு ஆதிக்க நாடுகள் இடையிலான பனிப்போர், கொரியாவில் பெரும் சண்டையாக வெடித்தது. ஐந்தே ஆண்டுகளில் மீண்டும் போரை சந்தித்தது ஒன்றுபட்ட கொரியா. 1950ல் தொடங்கிய கொரியப் போர் மூன்று வருடங்கள் நீடித்தது.

1953-ல் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாக வட கொரியா மற்றும் தென் கொரியா என இரண்டு நாடுகள் உருவாகின. போர் நிறுத்தத்தின்போது எந்த அமைதி ஒப்பந்தமும் ஏற்படவில்லை. அப்போதிலிருந்தே இரு நாடுகள் இடையே பிரச்சினைகள் தொடர்ந்து வருகிறது. இன்றும் தென் கொரியாவில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கே அமெரிக்கப் படைகள் இருக்கின்றன. வட கொரியாவுக்கு அமெரிக்கா என்றாலே வெறுப்பு. அந்த வெறுப்பு தென் கொரியா மீதும் பாய்ந்து கொண்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்