76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 10,000 கைதிகளுக்கு பொது மன்னிப்பு: மியான்மர் ராணுவ அரசு நடவடிக்கை

By செய்திப்பிரிவு

பாங்காக்: மியான்மரில் சுதந்திர தினத்தை யொட்டி 10,000 கைதிகளை விடுவிக்க அந்நாட்டு ராணுவ அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மியான்மர் அரசு தொலைக்காட்சியான எம்ஆர்டிவி தெரிவித்துள்ளதாவது:

பிரிட்டனிடமிருந்து மியான்மர் சுதந்திரம் பெற்ற 76-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 9,652 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக மியான்மர் ராணுவக் குழுவின் தலைவரும், மூத்த தளபதியுமான மின் ஆங் ஹலைங் அறிவித்துள்ளார். அதன்படி, மியான்மர் சிறையில்அடைபட்டுள்ள 114 வெளிநாட்டவர்களுக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில்நாடு கடத்தப்படுவார்கள். இவ்வாறு எம்ஆர்டிவி தெரிவித்துள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூத்த அரசியல்வாதியும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி உட்பட ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. 76-வது சுதந்திர தினம் ஜனவரி 4-ம் தேதி கொண்டாடப்பட்டதையொட்டி கைதிகள் விடுவிப்பு நடவடிக்கை நேற்று தொடங்கியது. இது நிறைவடைய இன்னும் பல நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யங்கூனில் உள்ள இன்செயின் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வரவேற்க நேற்று அதிகாலையில் சிறைவாசல் முன்பு ஏராளமான உறவினர்கள் குவிந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE