ஜப்பான் நிலநடுக்கம் | இதுவரை 73 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு

By செய்திப்பிரிவு

டோக்கியோ: ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மரணமடைந்த அனைவரும் முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட இஷிகாவா மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஆயிரக்கணக்கான வீரர்கள் கனமழையிலும், உறைய வைக்கும் குளிரிலும் ஈடுபட்டு வருகின்றனர். சேதமடைந்த சாலைகளால் தொலைதூரத்தில் உள்ள கிராமங்களில் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 1-ம் தேதி ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவானது. நோட்டோ தீபகற்பத்தில் இஷிகாவா மாகாணத்தில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் 7.6 ரிக்டராகப் பதிவானது. தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை பதிவாகின.

அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 5 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகளை எழலாம் எனக் கணிக்கப்பட்ட நிலையில் அதிகபட்சமாக இஷிகாவா மாகாணத்தின் வாஜிமா துறைமுகத்தில் 1.2 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்தன. இதனையடுத்து அடுத்த நாளில் சுனாமி எச்சரிக்கையை ஜப்பான் அரசு வாபஸ் பெற்றது. ஜப்பானில் கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இது என்ற ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE