கடலோர காவல் படை விமானத்துடன் மோதியதில் ஜப்பான் விமானம் தீப்பற்றியது: 5 வீரர்கள் உயிரிழப்பு, 17 பயணிகள் காயம்

By செய்திப்பிரிவு

டோக்கியோ: ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம், கடலோர காவல் படை விமானத்துடன் மோதி நேற்று தீப்பிடித்ததில், 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜப்பானின் கொக்கைடோ பகுதியிலிருந்து புறப்பட்ட ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ350 விமானம் 379 பேருடன், டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியது. அப்போது அதே ஓடு பாதையில் ஜப்பான் கடலோர காவல் படைக்கு சொந்தமான எம்ஏ722 ரக விமானம், மேற்கு ஜப்பானின் நிகாடா விமான நிலையத்துக்கு செல்ல தயாராக இருந்தது. ஜப்பானில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களுடன் கடலோர காவல் படை வீரர்கள் 6 பேர் அதில் இருந்தனர்.

டோக்கியோ விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கிய பயணிகள் விமானம், எதிர்பாராதவிதமாக கடலோர காவல் படை விமானத்தின் மீது மோதி தீப்பற்றியது. இதையடுத்து பயணிகள் விமானத்தில் இருந்த அனைவரும் அவசர கதவுகள் மூலமாக வெளியேறினர். இதில் 17 பயணிகள் காயம் அடைந்தனர். விமானத்தில் பரவிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர். பயணிகள் விமானம் மோதியதில், கடலோர காவல் படை விமானத்தில் இருந்த 5 வீரர்கள் உயிரிழந்தனர். விமானத்தின் கேப்டன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து டோக்கியோ விமான நிலையத்தின் அனைத்து ஓடு பாதைகளும் சில மணி நேரம் தற்காலிகமாக மூடப்பட்டன. டோக்கியோ விமான நிலையம் மிக முக்கியமான விமான நிலையம் என்பதாலும், புத்தாண்டு விடுமுறை காலம் என்பதாலும், அங்கு அதிகளவில் வந்த விமானங்கள், அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. விமானங்களின் புறப்பாடும் பல மணி நேரம் தாமதமானது. மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE