“ஒருவித அமைதியில் உயிர் பயம் உணர்ந்தேன்” - ஜப்பான் நிலநடுக்க அனுபவம் பகிர்ந்த முதியவர்

By செய்திப்பிரிவு

டோக்கியா: ஜப்பான் நாட்டில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் யிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. வீடுகள், கட்டிடங்கள் பலவும் சேதமடைந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக அப்பகுதி மக்கள் அல்லல்படுகின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்டபோது தங்கள் எவ்வாறு உணர்ந்தோம் என்பதை இருவர் விவரித்திருக்கின்றனர்.

ஜப்பானில் புத்தாண்டு தினமான நேற்று (ஜன.1) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டிருந்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இப்போதைக்கு தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியது. பின்னர், இந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் 7.6 ரிக்டராகப் பதிவானது. ஆனால், அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. அவை 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை பதிவாகின.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய நகரமான ஷிகாவில், நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் கடும் குளிரில் காத்திருந்து, அத்தியாவசியமான பொருட்களை அதாவது குடிநீர் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர். நிறைய கட்டிடங்கள் இடிந்து விழந்ததில் குழாய்கள் சேதமடைந்தன. மக்கள் தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரம் துண்டிப்பு என இக்கட்டான சூழ்நிலையில் தங்களது நாட்களை கழித்து வருகின்றனர். அப்பகுதியில் ஒரு பயங்கரமான அமைதி நிலவுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் வகிக்கும் சுகுமாசா மிஹாரா என்ற 71 வயது முதியவர் நிலநடுக்கம் ஏற்பட்ட புத்தாண்டு தினத்தன்று தனது பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிவிட்டு, அவர்களுக்கு தன்னால் முடிந்த புத்தாண்டு பரிசுகளையும் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு ஏற்பட்ட நிலநடுக்கம், தான் இதுவரை கண்டிராத சம்பவமாக இருந்தது எனத் தெரிவிக்கிறார்.

இது குறித்து சுகுமாசா மிஹாரா விவரிக்கும்போது, “நிலநடுக்கம் ஏற்பட்டபோது சமையலறையில் இருந்தப் பாத்திரங்கள் சிதறின. ஆனால் எங்களுடைய குடும்பத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேசமயம் முன்சாரமும் இருந்தது. ஆனால் தற்போது தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. நிலநடுக்கங்களால் பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சுனாமி எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது. ஒருவிதமான உயிர் பயத்தை உணர்ந்தேன். அதேவேளையில், நான் யாருக்கும் உதவி செய்ய முடியாத நிலையில் இருந்தேன். ஆனால் இந்தப் பிரச்சினை சீக்கிரம் முடிய வேண்டும் என நினைத்து பிரார்த்தினை மட்டும் செய்தேன்” என்றார்.

58 வயதான யூகோ என்பவர், "நிலநடுக்கம் ஏற்பட்டபோது நான் இரண்டாவது மாடியில் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். நான் நிச்சயமாக என் உயிருக்கு பயந்தேன், ஆனால் நான் என் குடும்பத்துடன் வசிப்பதால் என்னால் ஓட முடியவில்லை. எங்களுக்கு தண்ணீர் தேவை ஏற்பட்டது. இதுபோன்ற ஓர் அனுபவம், தண்ணீர் எவ்வளவு இன்றியமையாதது என்பதை நினைவூட்டுகிறது” என்றார் ஒருவித பயத்தோடு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE