ஜப்பான் நிலநடுக்கம் | பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு: சுனாமி எச்சரிக்கை வாபஸ்

By செய்திப்பிரிவு

டோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு தினமான நேற்று (ஜன.1) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டிருந்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இப்போதைக்கு தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க சேதங்களைக் கணக்கிட அரசு குழுக்கள் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு விரைந்துள்ளன.

பயங்கர நிலநடுக்கம்: ஜனவரி 1 ஆம் தேதி இந்திய நேரப்படி பகல் 12.40 மணிக்கு ஜப்பானில் முதல் நிலநடுக்கம் பதிவானது. நோட்டோ தீபகற்பத்தில் இஷிகாவா மாகாணத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் தாக்கம் 7.6 ரிக்டராகப் பதிவானது. ஆனால் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. அவை 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை பதிவாகின.

அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 5 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகளை எழலாம் எனக் கணிக்கப்பட்ட நிலையில் அதிகபட்சமாக இஷிகாவா மாகாணத்தின் வாஜிமா துறைமுகத்தில் 1.2 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்தன. இந்நிலையில், ஜப்பான் நேரப்படி செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில் சுனாமி எச்சரிக்கையை அரசு வாபஸ் பெற்றது.

ஜப்பான் வானிலை ஆய்வு மையமானது இனி சுனாமி எச்சரிக்கையை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. என்றாலும் கூட கடல் மட்டத்தில் சில மாற்றங்கள் உள்ளன. அதனால் மக்கள் கடல் சார் பணிகளை சில நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் நிகாடா, டோயோமா, புகுயி, கிஃபு மாகாணாங்களில் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுவதாக அரசுத் தரப்பு தெரிவிக்கின்றது.

இன்னும் ஒருவாரத்துக்கு உஷார்: நேற்று (திங்கள் கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 129 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இவை 2 முதல் 6 ஷிண்டோ வரை (ஷிண்டோ என்பது ஜப்பான் நிலநடுக்க அளவுகோல். ரிக்டருக்கு பதிலாக ஷிண்டோ அளவுகோலில் அவர்கள் கணக்கிடுகின்றனர். ) இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரத்துக்குள் மீண்டும் 7 ஷிண்டோ அளவில் நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும் மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

பிரதமர் உறுதி: ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று செய்தியாளர்களை சந்திக்கையில், “இஷிகாவா மாகாணத்தில் அவசர பேரிடர் மேலாண்மை குழு முழு வீச்சில் செயல்பாட்டில் உள்ளது. அவர்கள் சேதங்களை ஆய்வு செய்வதோடு, மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். நேரம் செல்லச் செல்லவே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தின் வீச்சு என்னவென்பது தெளிவாகப் புலப்படுகிறது. இப்போதைக்கு பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதே இலக்கு. காயமடைந்தவர்களை துரிதமாக மீட்டு உயிர்ச்சேதங்களைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.

இந்திய தூதரகம் அறிவிப்பு: ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் சுமார் 50,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களது நலன் கருதி, டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஜப்பானில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுகிறோம். உதவி தேவைப்படுவோர் இந்திய தூதரகத்தை அணுகலாம். இதற்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

81-80-3930-1715 (யாகுப் டோப்னோ), 81-70-1492-0049 (அஜய் சேத்தி), 81-80-3214-4734(பன்வால்), 81-80- 6229-5382 (பட்டாச்சாரியா), 81-80-3214-4722 (விவேக் ரத்தோர்) ஆகிய எண்களில் இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். sscons.tokyo@mea.gov.in மற்றும் offfseco.tokyo@mea.gov.in ஆகிய இ-மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE