உக்ரைன் மீது சரமாரி தாக்குதல் நடத்திய ரஷ்யா - 12 பேர் பலி; 60+ காயம்

By செய்திப்பிரிவு

கீவ் (உக்ரைன்): ரஷ்யா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி வியாழக்கிழமை இரவு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதில் 12 பேர் பலியாகியுள்ளதாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள நகரங்கள் மற்றும் கீவ் உட்பட பல பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. உக்ரைன் மீது 110-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 36 ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. அவற்றில் பல ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் 12 பேர் பலியாகியுள்ளதாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. சமீப காலமாக உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றாக இந்தத் தாக்குதல் அமைந்ததுள்ளது.

வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து நான்கு பிராந்தியங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், மெட்ரோ நிலையம், குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

உக்ரைன் விமானப்படை 87 ஏவுகணைகளையும் 27 ஷாஹெட் வகை ட்ரோன்களையும் ஒரே இரவில் இடைமறித்ததாக உக்ரைனின் ராணுவத் தளபதி வலேரி ஜலுஷ்னி கூறியுள்ளார்.

”இந்த தீவிரவாத தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம். நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்புக்காகவும் தொடர்ந்து போராடுவோம்” என அந்நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “புதினை நாங்கள் வெற்றி பெற விடமாட்டோம். உக்ரைனுடன் நாங்கள் தொடர்ந்து நிற்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE