2023 ஆண்டு பிறக்கும்போதே முந்தைய ஆண்டின் உக்ரைன் - ரஷ்யா போர் ஓராண்டை எட்டவிருந்தது. இப்போது 2023 முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் - ஹமாஸ் போர் மூண்டுள்ளது. இன்று, டிச.26, 2023 நிலவரப்படி இந்தப் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்துவிட்டது. இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள். ஒவ்வொரு முறையும் ஒரு பெரும் போர் மூளும்போதும் மூன்றாம் உலகப் போர் இதுவாக இருக்கலாம், இல்லை இது அதற்கு அடித்தளமாக அமையலாம் என்றெல்லாம் ஊகங்கள் உருவாகின்றன. வடகொரியா போன்ற நாடுகள் அன்றாடம் நடத்தும் ஆயுதச் சோதனைகள் அந்த ஊகங்கள் உண்மையாகிவிடுமோ என்பதற்கு சாட்சியாக நிற்கின்றன.
உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - ஹமாஸ் போர் போன்று பெரிய அளவில் பரபரப்பாக பேசப்படாததாலோ என்னவோ ஏமன் கலவரம், சிரியா உள்நாட்டுப் போர், சூடான் கிளர்ச்சி எனப் பல போர்கள் கவனிக்கப்படாமல் போய்விடுகின்றன. உள்நாட்டுக் கலவரங்கள் உலகம் முழுவதுமே விரவிக் கிடக்கின்றன. அந்த வகையில் கடந்த மே தொடங்கி இன்று வரை முழுமையாக இயல்புக்குத் திரும்பாத மணிப்பூரும் ஒரு யுத்த பூமிதான். இப்படி இந்த ஆண்டு உலகை உலுக்கிய போர்கள், மோதல்கள், உள்நாட்டுக் கலவரங்கள் பற்றிய தொகுப்பு இது.
மூன்றாம் உலகப் போர் மூளுமா? - அதிகார வேட்கைதான் பெரும்பாலான யுத்தங்களின் அடிப்படையாக இருந்திருக்கிறது. அது துண்டு நிலத்தின் மீதான அதிகார வேட்கையாக இருக்கலாம் அல்லது இயற்கை வளத்தின் மீதான வேட்கையாக இருக்கலாம். உலக வரைபடத்தில் தன் இருப்பை இருமாப்புடன் தெரிவிக்கும் வேட்கையாகக் கூட இருக்கலாம். இதனை எர்னஸ்ட் ஹெம்மிங்வே வேறு வார்த்தைகளில் உணர்த்துகிறார். ”உங்கள் சகமனிதரைவிட நீங்கள் உயர்ந்தவர் என்று நிரூபிப்பதைக் காட்டிலும், முன்பைவிட உங்களை நீங்களே மேம்படுத்துவதே உண்மையான உயர்வு” என்று தனது ‘ஃபேர்வல் டு ஆர்ம்ஸ்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாறிவரும் உலக அரசியல் சூழல், தாராளமயம், உலகமயமாக்கல் என்று மாறிவிட்ட பொருளாதாரப் போக்கு ஆகியன முழுவீச்சில் முன்புபோல் அணி திரண்டு மூன்றாம் உலகப் போரை நடத்துவதென்பதை வேகத்தடுப்புகள் அமைத்து தடுத்துவைத்திருக்கின்றன என்பது மிகையாகாது. யாரும் யாரைவிடவும் பூரணமாக உயர்ந்தவர் இல்லை என்பதை போர்களும், போர் புகைச்சல்களும் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன.
» நைஜீரியாவில் ஆயுதக் குழு கொலைவெறித் தாக்குதல்: 113 பேர் பலி; 300 பேர் காயம்
» Rewind 2023: துருக்கி பூகம்பம் முதல் இஸ்ரேல் Vs ஹமாஸ் வரை - உலகை உலுக்கிய நிகழ்வுகள்
உக்ரைன் -ரஷ்யா போர் மூண்டால், அது ஆப்பிரிக்காவின் எத்தியோபாவில் பட்டினிச் சாவுகளை மேலும் அதிகரிக்கிறது, கச்சா எண்ணெய் விலையை தாறுமாறாக உயர்த்துகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் மோதிக் கொண்டால் அண்டை நாடான எகிப்து யுத்த சமரசத்துக்கு அத்தனை முயற்சிகளையும் எடுக்கிறது. போரின் அதிர்வலைகள்தான்... அது முழு வீச்சில் உலகப் போராக மாறிவிடக் கூடாது என்பதனை உணர்த்தி எச்சரிக்கை மணி அடித்து இதுபோன்ற முன்னெடுப்புகளுக்கு வழிவகுக்கிறது. இருந்தாலும் போர்கள் ஓய்வதில்லை என்பதுபோல் 2023 நிறைய மோதல்களைக் கண்டுவிட்டது. அவற்றில் முதலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இஸ்ரேல் - ஹமாஸ் போராகத்தான் இருக்கிறது.
மத்திய கிழக்கில் புதிதல்ல ஆனால்.. - மத்திய கிழக்கில் போர் என்பது புதிதல்ல. காசாவை இஸ்ரேல் தாக்குவதும் அப்படியே. 1948-லேயே இத்தகைய பேரழிவை பாலஸ்தீனம் சந்தித்துவிட்டது. ஆனால், 2023 போரின் வீச்சுதான் இப்போது அதை விரிவாக விவாதிக்கப்பட வேண்டியதாக ஆக்கியுள்ளது.
அல் நக்பாவைவிட ஆபத்தானதுதானா? - 1947 வரை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பாலஸ்தீனம் இருந்தது. பாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்தபோது அரபிக்களும், யூதர்களும் இருந்த பாலஸ்தீனம் இரண்டாகப் பிரியும் சூழல் உருவானது. யூதர்களுக்கு இஸ்ரேல், அரபிக்களுக்கு பாலஸ்தீனம். புனித நகரான ஜெருசலேம் சர்வதேச நகரமாக இருக்கும் என்பதுதான் பிரிட்டன் பரிந்துரைத்த யோசனை. இந்த யோசனையை ஐ.நா.வும் அங்கீகரித்தது. ஆனால், பாலஸ்தீன அரபிக்கள் இதனை ஏற்கவில்லை. ஓராண்டு காலம் பல்வேறு சர்ச்சைகள் நடந்த நிலையில், 1948-ல் பிரிட்டன் வெளியேறியது. அதனைத் தொடர்ந்து யூத தலைவர்கள் இஸ்ரேல் நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார்கள். அதன் நீட்சியாக போர் மூண்டது.
1948 போரில் 7 லட்சம் பாலஸ்தீனியர்கள் சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இஸ்ரேல் தங்கள் நிலத்தை ஆக்கிரமித்த அந்த பாலஸ்தீனியர்கள் அல் நக்பா (பேரழிவு) எனக் கூறுகின்றனர். இப்போது மீண்டும் காசாவில் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் அதையே செய்வதாகவும் கூறுகின்றனர்.
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதல் உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த நுண்ணறிவு படையைக் கொண்ட இஸ்ரேலுக்கு ஒரு சறுக்கல். 250 பேரை ஹமாஸ் குழுவினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இஸ்ரேல் - ஹமாஸ் போர் அக்டோபர் 7, 2023-ல் தொடங்கியது. வலுப்பெற்றது. பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
அரபு நாட்டுப் போர்கள் அவ்வப்போது நடப்பதுதான் என்றாலும் கூட அக்டோபர் 7 தொடங்கி டிசம்பர் 27 வரை 20,057 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதுதான் இந்தப் போரின் வீச்சுக்கு சாட்சி. காசாவில் பள்ளிக் கட்டிடங்கள், மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள் என எதையும் விட்டுவைக்க விரும்பாமல் தகர்த்துள்ளது இஸ்ரேல். டிச.23-ல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் அவசரமாக, உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் குறிப்பிட்ட காலத்துக்கு போர் நிறுத்தம் செய்வது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது.
2003, 2023 இன அழிப்புச் சம்பவங்களும் சூடானும்: இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் என்பது ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், உள்நாட்டு போர்களின் தாக்கம் முற்றிலும் மாறுபட்டது. கிட்டத்தட்ட ஒரு தற்கொலை முயற்சி போன்றது. அப்படியான பிரச்சினையை இந்த ஆண்டு மீண்டும் சந்தித்தது சூடான்.
இதுதான் பின்னணி: 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சூடான் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. 1956-ல் சூடான் விடுதலை பெற்றது. அந்தச் சுதந்திரதுக்கு முன்னதாகவே தெற்கு சூடான், வடக்கு சூடான் என்ற சர்ச்சை நிலவிவந்தது. 1958, 1969 ஆகிய ஆண்டுகளில் அங்கே பெருமளவில் உள்நாட்டுக் கிளர்ச்சி நடந்தது. 1972-ல் அடிஸ் அபாபா ஒப்பந்தத்தின்படி தெற்கு சூடான் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
பின்னர் 1983-ல் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்தது. காரணம், ஆட்சியைக் கைப்பற்றியிருந்த ராணுவம் முஸ்லிம் ஷாரியா சட்டத்தை திணிக்க முயன்றது. கிறிஸ்துவர்களும், அனிமிஸ்ட்ஸ் என்ற மதத்தவரும் அதிகம் இருந்த தெற்கு சூடானில் இந்தத் திணிப்பு கிளிர்ச்சியாக வெடித்தது. பின்னர் 1989-ல் ஆளுங்கட்சியும் தெற்கின் எதிர்ப்புக் குழுக்களுக்கும் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தின.
அப்போது அரசியல் ரீதியாகவும், மதம் சார்ந்தும், ராணுவம் ரீதியாகவும் பலம் பொருந்தியவராக இருந்த ஒமர் அல் பஷீர் ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி ராணுவத் தளபதியாகவும், பிரதமராகவும் பிரகடனம் செய்து கொண்டார். ஆனால், 1996-க்குப் பின்னர் அல் பஷீர் தொடர்ந்து தன்னை அதிபராக நிலைநிறுத்திக் கொண்டார். 1996-க்குப் பின்னர் அங்கு தேர்தலே நடைபெறவில்லை.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு அந்த நாட்டின் அதிபர் ஒமர் அல்-பஷீர் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டத்தால் அகற்றப்பட்டது. இதன்பின் புதிய அரசை அமைப்பதற்கான ஜனநாயக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, ராணுவம் நாட்டைக் கைப்பற்றியது. இதனால், சூடான் ராணுவத்துக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூடான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் செயல்படுகின்றன. அதுமட்டுமல்லாது ராணுவத்தின் ஒரு பிரிவான பலம் பொருந்திய துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் (Rapid Support Forces) என்ற பிரிவும் ராணுவ ஆட்சிக்கு எதிராக இயங்கிவந்தது. இந்நிலையில், ஏப்ரல் 2023-ல் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் ஏற்பட்டது. அமெரிக்க தலையீட்டால் ஓரளவு இயல்பு திரும்பியிருந்தாலும் கூட இது எப்போது வேண்டுமானால் தூங்கிக் கொண்டிருக்கும் எரிமலை சீறுவதுபோல் சீறலாம்.
சூடானில் விவசாய நிலம் நிறைய இருந்தாலும் கூட அங்கே தங்கச் சுரங்கங்களும், எண்ணெய் வளம் நிறைந்த பகுதிகளும் நிறைய இருக்கின்றன. சூடானில் பருத்தி, நிலக்கடலை விளைவிக்கப்படுகிறது. சூடானின் ஏற்றுமதி வருவாயில் 73 சதவீதம் எண்ணெய் ஏற்றுமதி வாயிலாக கிடைக்கின்றது. எல்லா வளமும் இருந்தும் சூடான் உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில்தான் இருக்கிறது. காரணம், அங்கே நிலையான ஆட்சி இல்லை. ஜனநாயக அரசு இல்லை. சிறு குழுக்களும், கிளிர்ச்சியாளர்களும், ராணுவமும்தான் ஆதிக்கம் செலுத்த முடிகிறது.
நாகர்னோ - காராபக் மோதல்: அர்மேனியா - அசர்பைஜான் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அடுத்த போராகக் கூட மூண்டுவிடலாம் என்று தகித்துக் கொண்டிருக்கிறது. அர்மேனியாவின் சில நிலப்பரப்புகளை உரிமை கோருகிறது அசர்பைஜான். ஆனால் அதற்கு அர்மேனியாவில் சில இனக் குழுக்கள் மிகக் கடுமையான எதிர்ப்பலைகளை வெளிப்படுத்தி வருகின்றன. எல்லைப் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக இரு நாடுகளுக்கும் இடையே 2020-ல் சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் 2022ல் அது மீறப்பட்டு மோதல் வெடித்தது. அப்போது அசர்பைஜான் ஆதிக்கம் செலுத்தியது. அர்மேனிய எல்லையில் 100-க்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.
அதன்பின்னர் நாகர்னோ - காராபக் எல்லையில் அசர்பைஜான் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. அங்குள்ள இனக் குழுக்களுக்கு ராணுவம் ஆயுதங்களை வழங்கி எல்லைப் போரை மூட்டிவிடக் கூடாது என்பதற்காக கடுமையான கெடுபிடிகளை அமலில் வைத்துள்ளது. சோவியத் குடியரசு உடைந்தபோது சிதறிய இந்த சிறிய நாடுகள் இன்னும் உடைந்துவிடாமல் இருக்க தன்னை வலுப்படுத்திக் கொள்ள எப்போதுமே போர் மேகம் சூழ பதற்றத்தில் இருக்கின்றன. அசர்பைஜானுக்கு ரஷ்யா, துருக்கி ஆதரவு இருக்கிறது.
இதனாலேயே அதன் கெடுபிடிகளுக்கு அஞ்சி நாகர்னோ - காராபக் எல்லையில் இருந்து 80 சதவீத இனக் குழுக்கள் அர்மேனியாவுக்குள் சென்றுவிட்டன. அதனால் அந்தப் பிராந்திய நிர்வாகம் வரும் 2024 ஜனவரி 1-ஆம் தேதியுடன் அப்பகுதியில் உள்ள அனைத்து அரசமைப்புகளையும் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட இருப்பதாகக் கூறியுள்ளார். நாகர்னோ - காராபக் அசர்பைஜானின் ஒருங்கிணைந்த பகுதியாகக்கூட அறிவிக்கப்படலாம்.
இப்படியும் ஓர் ஆயுதக் குழு: போர்கள் பற்றிய இந்தத் தொகுப்பில் வாக்னர் குழுவைப் பற்றி தழுவாமல் சென்றால் அது முற்றுபெறாது. உக்ரைன் - ரஷ்யா போரில் உலக கவனம் ஈர்த்த வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜி கடந்த ஆகஸ்ட் 2023-ல் விமான விபத்தில் உயிரிழந்தார்.
வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒருவித கூலிப்படை என்றும் கூறலாம். ஏனெனில், ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போரில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக இந்தக் குழுவினர் இயங்குகின்றனர்.
டிமிட்ரி உக்டின் என்ற முன்னாள் ரஷ்ய அதிகாரி மற்றும் யெவ்ஜின் ப்ரிகோஸின் என்ற புதினின் முன்னாள் தலைமை சமையல் நிபுணரும் இணைந்து 2014-ல் இந்தப் படையை உருவாக்கினர். கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், சிறை சென்று திரும்பியவர்கள் உண்டு. ஏன் தண்டனையிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் கூட ‘தி வாக்னர்’ குழுவில் இணைந்து தப்பித்துக் கொள்வதுண்டு. ஒரு மூர்க்கத்தனமான ஆயுதக் குழு. 2015-ல் தொடங்கி இந்த ஆயுதக் குழு சிரியா, லிபியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டுக் கிளர்ச்சிகளில் அரசுக்கு ஆதரவாகப் பணியாற்றியுள்ளது. அதேபோல் சிரியாவின் தங்கச் சுரங்கங்களைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது
வாக்னர் ஆயுதக் குழு உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ராணுவத் தாக்குதலின்போது பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. குறிப்பாக, கிழக்கு உக்ரைனின் பக்முத் பகுதி கைப்பற்றப்பட்டதில் வாக்னர் ஆயுதக் குழுவின் செயல்பாடுகளுக்கு அதிபர் புதினே பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காசு கொடுத்தால் எந்தப் பக்கமும் நின்று போர் புரிவார்கள். பக்முத்தில் வாக்னர் குழுவை இறக்கி தங்கள் படைகளுக்கு பெரும் சேதத்தை ரஷ்யா ஏற்படுத்தியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி இருந்தது. புதினுக்கு எதிராகவே கிளர்ச்சியில் ஈடுபட்டதால் வீழ்த்தப்பட்ட வாக்னர் குழு கூலிப்படைகளுக்கு ஒரு பாடம். ஆயுதம் மரணத்தைத் தவிர வேறதையும் கொண்டுவராது என்பதற்கான சாட்சி.
இவை மட்டும்தானா இப்போது உலகில் நடக்கும் மோதல்களும், போராட்டங்களும் என்றால் அல்ல. இரண்டு நாட்களாக செய்திகளில் இடம்பெற்றுள்ள நைஜீரிய கலவரம் தொடங்கி சிரியா வரை இன்னும் நிறைய மோதல்கள் இருக்கின்றன. போர்களில் சிந்தப்படும் ரத்தம் அல்ல, போர்கள்தான் உறையவேண்டும் உலகம் அமைதி பெற.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago