சர்வதேச அழுத்தம் அதிகரித்தாலும் போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

ஜெருசலேம்: சர்வதேச அளவில் இருந்து போர் நிறுத்தத்துக்கான அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சண்டையிடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் குழுக்கள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில், அப்பாவி மக்களின் உயிரைக் காக்க காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐநா பொதுச்சபையில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

காசா போர் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தனது அதிருப்தியை வெளிபடுத்தியிருந்தார். இது குறித்து அவர், “காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் படையினர் மீதான தாக்குதலில், பாலஸ்தீன மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இஸ்ரேல் மிக கடினமான நிலையை சந்திக்க நேரிடும். இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது” என்றார்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது குறித்து பகிர்ந்த வீடியோவில், “நாங்கள் கடைசி வரை போராடுவோம். இதற்குமேல் பேச எதுவுமில்லை. போர் நிறுத்தத்துக்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுத்தாலும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சண்டையிடும் என்பதை வலியுடன் பதிவு செய்கிறேன். யாராலும் எங்களைத் தடுக்க முடியாது. வெற்றியை நோக்கி இறுதிவரை நாங்கள் செல்வோம். அதைவிட எங்களுக்கு பெரிது எதுவும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார். தற்போதுவரை இஸ்ரேல் மக்கள் 1,200 பேரும், பாலஸ்தீன மக்கள் 18,500-க்கும் மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE