“காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் பிரிட்டன் மன்னர் சார்லஸின் குரல் முக்கியமானது” - பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: துபாயில் நேற்று முன்தினம் ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு தொடங்கிய நிலையில், காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் குரல் முக்கியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்றுவரும் மாநாட்டிற்காக துபாய் சென்றிருந்த பிரதமர் மோடி, மன்னர் மூன்றாம் சார்லஸை நேற்று சந்தித்துள்ளார். அதோடு இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உள்ளிட்ட பல உலக தலைவர்களையும் சந்தித்துள்ளார். பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்தது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியில் எப்போதும் ஆர்வம் காட்டும் சார்லஸ் மன்னருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் அவரின் குரல் முக்கியமானது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 1992-ம் ஆண்டில் ஐ.நா. சபை சார்பில் நடத்தப்பட்ட ‘பூமி மாநாட்டில்' காலநிலை மாற்றத்தை தடுக்க உறுதியேற்கப்பட்டது. இதன்படி கடந்த 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. சபை சார்பில் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் 28-வது மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு துபாய் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE