2028 மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும்: ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி யோசனை

By செய்திப்பிரிவு

துபாய்; வரும் 2028-ம் ஆண்டுக்கான ஐ.நா. பருவநிலை மாறுபாடு மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

கடந்த 1992-ம் ஆண்டில் ஐ.நா. சபை சார்பில் நடத்தப்பட்ட ‘பூமி மாநாட்டில்' பருவநிலை மாற்றத்தை தடுக்க உறுதியேற்கப்பட்டது. இதன்படி கடந்த 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. சபை சார்பில் பருவநிலை மாறுபாடு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் 28-வது மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நேற்று முன்தினம் தொடங்கியது.

மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு துபாய் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை வரவேற்க பெருந்திரளான இந்தியர்கள் தேசிய கொடியுடன் திரண்டிருந்தனர். பாரத மாதாவுக்கு ஜே, வந்தே மாதரம் கோஷங்களை எழுப்பி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரீஸ் ஒப்பந்தம்: இதைத் தொடர்ந்து துபாயில் நேற்று நடைபெற்ற 2-வது நாள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்தியா முன்மாதிரியாக செயல்படுகிறது. உலகின் மக்கள் தொகையில் இந்தியாவில் 17 சதவீதம் பேர் வாழ்கின்றனர். எனினும் சர்வதேச கரியமில வாயு உமிழ்வில் இந்தியாவின் பங்கு வெறும் 4 சதவீதமாகவே உள்ளது.

பருவநிலை மாறுபாட்டை தடுக்க பாரீஸ் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. சில நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்த விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்தி வருகின்றன. இதில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

வரும் 2070-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கரியமில வாயு என்ற இலக்கை எட்ட உறுதி பூண்டுள்ளோம். இந்தியாவில் சுற்றுச்சூழலை பாதுகாப்போரை ஊக்கப்படுத்த மத்திய அரசு சார்பில் பசுமை வெகுமதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பணியாற்றும் தனிநபர், அமைப்புகளுக்கு அரசு சார்பில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அன்னை பூமியைப் பாதுகாக்க சர்வதேச அளவில் பசுமை வெகுமதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

கடந்த நூற்றாண்டு தவறுகளை திருத்த முடியாது. சில நாடுகளின் தவறான நடவடிக்கைகளால் பூமியின் சுற்றுச்சூழல் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் எதிர்விளைவுகளை ஒட்டுமொத்த உலகமும் இப்போது அனுபவித்து வருகிறது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத தொழில் நுட்பங்களை பெற்றிருக்கும் வளர்ந்த நாடுகள் தங்களது சுயநலத்தைக் கைவிட்டு ஏழை நாடுகளுக்கு அந்த தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும். வரும் 2028-ம் ஆண்டுக்கான ஐ.நா. பருவநிலை மாறுபாடு மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE