COP28 | பருவநிலை மாற்றத்துக்கான லட்சியத்துக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும்: பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

துபாய்: பருவநிலை மாற்றத்துக்கான லட்சியத்துக்கு ஏற்ப அதற்கான நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

துபாயில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் காலநிலை உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் அலிடிஹாட் செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது: “காலநிலை மீதான உலகின் லட்சியங்கள் அதிகரித்துள்ளன. அதற்கு பொருந்தக்கூடிய வகையில் நிதி ஒதுக்கீட்டில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான், தற்போதைய சந்திப்பு பயனுள்ளதாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் இருக்கும்.

காலநிலை குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை நோக்கி முன்னேறுவதில் COP28 உச்சி மாநாடு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், இது சர்வதேச ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் இந்தியா நம்புகிறது. பசுமையானதும், வளமானதுமான எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பங்குதாரர்களாக உள்ளன. மேலும், காலநிலை நடவடிக்கை குறித்த உலகளாவிய உரையாடலில் செல்வாக்கு செலுத்துவதற்கான எங்கள் கூட்டு முயற்சிகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

காலநிலை நடவடிக்கை விவகாரத்தில் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவுகள் கூட்டாண்மையுடன் செயல்படுவது, எதிர்காலத்தின் நலன் கருதி இரு தரப்பு செயல்பாட்டை வலிமையிலிருந்து மேலும் வலிமையாக்குவது என்ற திசையில் இருக்கும். இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் வலுவான மற்றும் நீடித்த உறவுகளைக் கொண்டிருக்கின்றன. எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், எரிசக்தி துறையில் ஒருவருக்கொருவர் பலத்தை அதிகரிப்பதற்கும், சர்வதேச சோலார் கூட்டணிக்கு ஆதரவை வழங்குவதற்கும் இரு நாடுகளும் உறுதி கொண்டுள்ளன" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

COP28 உச்சிமாநாடு: COP என்பது 1992ம் ஆண்டு ஐநா சபையில் காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் உச்சி மாநாட்டை குறிக்கிறது. காலைநிலை மாற்றம் குறித்த ஐநா சபையின் 28-வது உச்சி மாநாடு இது என்பதால் இதற்கு COP28 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் கலந்து கொள்கின்றன. புவி வெப்ப நிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கை எட்டுவது குறித்து ஆராய்வதை இந்த உச்சி மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்