சாட் ஜிபிடியை உருவாக்கிய ‘ஓப்பன் ஏஐ’ சிஇஓ சாம் ஆல்ட்மேன் நீக்கம்

By செய்திப்பிரிவு

சான்பிரான்சிஸ்கோ: சாட்ஜிபிடி செயலியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவி வகித்து வந்தவர் சாம் ஆல்ட்மேன். இவர் நிறுவனத்துடன் வெளிப்படைத்தன்மையுடனும் சரியான முறையிலும் தொடர்பில் இல்லை என்று குற்றம்சாட்டி கடந்த வெள்ளிக்கிழமை, ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் இயக்குநர் குழு, சாம் ஆல்ட்மேனை நிறுவனத்திலிருந்து நீக்கியது. அவருக்குப் பதிலாக, அந்நிறுவனத்தின் மீரா முராதி சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.

சாம் ஆல்ட்மேனின் நீக்கம் சர்வதேச அளவில் தொழில் நுட்பத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால், ஓப்பன் ஏஐ நிறுவ னத்தின் நிறுவனர்களில் ஒருவர் சாம் ஆல்ட்மேன். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் புதிய பாய்ச்சலான ‘சாட் ஜிபிடி’ அவரது தலைமைத்துவத்தின் கீழ்தான் உருவாக்கப்பட்டது. இதனால், செயற்கை நுண்ணறிவு துறையின் மிக முக்கியமான முகமாக சாம் ஆல்ட்மேன் உள்ளார். இந்நிலையில், அவரை நிறுவனத்திலிருந்து இயக்குநர் குழு நீக்கி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சாம் ஆல்ட்மேனின் நீக்கத்தைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் தலைவர் கிரேக் ப்ரோக்மேன் உட்பட முக்கிய அதிகாரிகள், ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஓப்பன் ஏஐ நிறுனத்தின் முதலீட்டாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் சாம் ஆல்ட்மேனை மீண்டும் சிஇஓ-வாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சாம் ஆல்ட்மேன் மீண்டும் சிஇஓ-வாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிநியமிக்கப்படும் பட்சத்தில் இயக்குநர் குழு ராஜினாமா செய்து வெளியேறும் என்று கூறப்படுகிறது. சாம் ஆல்ட்மேனுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE