தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க உகந்த சூழல் உருவாகி உள்ளது: இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் நம்பிக்கை

By மீரா ஸ்ரீனிவாசன்

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் ஆர்.சம்பந்தன் (84). மூத்த அரசியல்வாதியான அவர், 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருக்கிறார். கொழும்பு நகரில் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் சம்பந்தன் கூறியதாவது:

இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் ஆகிறது. அந்தக் கூட்டணிக்கு ஆதரவு அளித்தது பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்?

ராஜபக்சே தலைமையிலான அரசு தமிழர்களுக்கு அநீதி இழைத்து வந்தது. இதனால் தமிழர்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்தனர். எனவே, அப்போது நாங்கள் சிறிசேனாவுக்கு ஆதரவு அளித்தது சரியான முடிவுதான். சிறிசேனா தேர்தலுக்கு முன்பிருந்தே தமிழர் நலன் சார்ந்த அரசியலில் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார். அப்போது தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருந்தவர்களில் சிறிசேனாவும் ஒருவர்.

மேலும் சிறிசேனாவும் ரணில் விக்கிரமசிங்கேவும் இணைந்து பணியாற்ற முடிவு செய்ததும் அவர்களை நாங்கள் ஆதரிக்க மற்றொரு முக்கிய காரணம்.

தமிழர்கள் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் உள்ளிட்ட அரசின் செயல்பாடுகளால் தமிழர்களுக்கு என்ன லாபம்?

தேசிய அளவில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண, புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கான நடைமுறைகள் 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இது தொடர்பாக பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 21 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அடிக்கடி கூடி ஆலோசித்து வருகிறது. இக்குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு இந்த நடைமுறைகள் விரைவுபடுத்தப்படும்.

உள்நாட்டுப் போரின்போது ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட தமிழர்களின் நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைப்பது, போரின்போது கைது செய்யப்பட்ட மற்றும் காணாமல் போனவர்கள் என்ன ஆனார்கள் என்பன உள்ளிட்ட தமிழர்களின் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்காதது கவலை அளிக்கிறது. அதேநேரம் எதுவுமே நடைபெறவில்லை என கூற முடியாது.

நாங்கள் அழுத்தம் கொடுத்ததால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிலரது நிலம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போரின்போது கைது செய்யப்பட்டவர்களில் இதுவரை 40 முதல் 50 சதவீதம் பேர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 20 ஆயிரம் பேரை காணவில்லை என புகார் வந்துள்ளது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற அடிப்படைத் தகவலையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்புகின்றனர்.

உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறப்பட்டது தொடர்பான புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஐநா மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தின் மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது தமிழர்களுக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளது.

நீங்கள் ஆதரிக்கக் கூடிய அரசியல் சட்ட சீர்திருத்தம் தொடர் பான நடைமுறைகள் தாமதமாகி வருவது குறித்து உங்கள் கருத்து என்ன?

என்ன நடக்கும் என்று முன்கூட்டியே கணிக்க முடியாது. ஒரு விஷயம் குறித்து விவாதம் நடைபெறவில்லை எனில், அதன் மீது பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை என்பது காரணமாக இருக்கலாம். அந்தப் பிரச்சினையின் நுணுக்கங்களுக்குள் போக விரும்பவில்லை. இதுபற்றி அனைத்து மாகாண முதல்வர்களுக்கும் நன்கு தெரியும். குறிப்பாக, மத்திய மற்றும் மாகாண அரசுகளிடையே அதிகார பகிர்வு வேண்டும் என்ற நிலைப்பாட்டை (தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு தவிர) அனைத்து மாகாண முதல்வர்களும் தீவிரமாக ஆதரிக்கிறார்கள். எனவே, இறுதி முடிவு எட்டப்படும் வரை அமைதியாக இருப்பேன்.

உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

நான் நம்பிக்கையற்றவன் அல்ல. நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சமத்துவம் அளிக்கக்கூடிய நியாயமான வளர்ச்சியை நோக்கிய பயணத்தை முன்னெடுத்துச் செல்ல அரசியல் தீர்வு தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்த விவகாரத்தில் சாதகமான முடிவு எட்டப்படும் என்று உறுதியாக இருப்போம். நாம் விரக்தி அடையக் கூடாது.

சிறிசேனா அரசு பொறுப்பேற்ற பிறகு சட்டம் ஒழுங்கு நிலைமை சீரடைந்துள்ளது. நீதித்துறை மற்றும் அரசு அமைப்புகளின் சுதந்திரம் நிலைநாட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதற்கு உகந்த சூழல் உருவாகி உள்ளது.

தமிழர்களுக்குள் இன மற்றும் மத ரீதியிலான பிளவு நீடிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

தமிழ் சமுதாயத்துக்குள் பிளவு இருப்பது உண்மைதான். இதுபோன்ற பிளவு எல்லா சமுதாயத்துக்குள்ளும் இருக்கிறது. அதேநேரம், இதுபோன்ற பிரச்சினையிலிருந்து தமிழர்கள் வெளிவர வேண்டும். பெரும்பான்மை சமூகத்தினருக்கு இணையான உரிமை தமிழர்களுக்கு கிடைக்கவில்லை. அதற்காகத்தான் போர் நடைபெற்றது. போர் முடிந்துவிட்டதால் மோதலுக்கு தீர்வு கிடைத்துவிட்டதாக அர்த்தம் அல்ல. அதேநேரம் புதிய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் அவர்களுக்கு எதிர்காலம் மீது நம்பிக்கை பிறக்கும்.

தமிழ் தேசிய கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்தி வருகிறது. இது உள்ளாட்சித் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா?

கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒரே ஒரு கட்சிதான் கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளது. எனவே, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

11 days ago

உலகம்

12 days ago

மேலும்