”இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும்” - பாலஸ்தீன தூதர்

By செய்திப்பிரிவு

டெல் அவில்: ஹமாஸ்- இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் நீடித்துவரும் நிலையில், இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும் என்று பாலஸ்தீன தூதர் இப்ராஹிம் கிரைஷி தெரிவித்துள்ளார்.

ஹமாஸ்- இஸ்ரேல் குறித்து பாலஸ்தீன தூதர் இப்ராஹிம் க்ரைஷி ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், "இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள் (UN member states) விழித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இந்த அறையிலேயே எழுந்திருக்க வேண்டும். இது ஒரு படுகொலை, இது இனப்படுகொலை. நாங்கள் இதை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். இது மாதிரியான செயல்களை தொடர முடியாது” என்றார். காசாவில் பாதுகாப்பான பகுதிகளே இல்லை என ஐநா தெரிவித்துள்ளது. இஸ்மாயில் ஹனியே என்பவர் ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பின் தலைவராக கருதப்படுகிறார். காசாவில் உள்ள அவரின் இல்லத்தை ஜெட் விமானங்கள் தாக்கியதாக இஸ்ரேல் கூறுகிறது. ஹனியே தற்போது கத்தாரில் வசிப்பதாக தெரிகிறது. இந்த வீடு ஹமாஸ் கூட்டம் நடைபெறும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக இஸ்ரேல் கூறுகிறது

அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான உலக நாடுகள் காசாவில் போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறும் இஸ்ரேலை அறிவுறுத்தி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினரை வேரோடு அழிக்கும் வரை தாக்குதலை நிறுத்த மாட்டோம் என்று இஸ்ரேல் சபதம் செய்துள்ளது. இதனால் காசாவில் உள்ள மக்களுக்கு முதலுதவி மற்றும் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. காசாவில் உள்ள மருத்துவமனைகள் சூறையாடப்பட்டு வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். காசா நகரத்தில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனையில் மின்சாரம், எரிபொருள், குடிநீர், அத்தியாவசிய மருந்துகள் என அனைத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நோயாளிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே, காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 வயது சிறுவன் ஒருவர் தனது கால்களை இழந்ததுடன், தான் இழந்துவிட்ட பெற்றோரையும், குடும்ப உறுப்பினர்களையும் தேடி வருவது மனதை உலுக்கும் சம்பவமாக இருக்கிறது. | வாசிக்க > “என் அம்மா, அப்பா எங்கே?” - இஸ்ரேல் தாக்குதலில் கால்களை இழந்த 4 வயது சிறுவனின் உலுக்கும் குரல்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE