”சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சனம்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நேற்று நடைபெற்ற 'ஏபிஇசி' (APEC Summit ) பொருளாதார உச்சி நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்துக் கொண்டனர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் முக்கிய உலகளாவிய பிரச்சினைகளான ஈரான், மத்திய கிழக்கு, உக்ரைன், தைவான், இந்தோ-பசிபிக், பொருளாதார பிரச்சினைகள், செயற்கை நுண்ணறிவு, மருந்துகள் மற்றும் காலநிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர் என மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஜோ பைடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தையில் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள உறவுகளை சரி செய்வதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் பயனுள்ள விவாதங்களை மேற்கொண்டோம். நாங்கள் சில முக்கியமான முடிவுகளை செய்துள்ளோம். அதிபர் ஜின்பிங்குக்கும் எனக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைய நேரடியான தொலைபேசி அழைப்பில் இருதரப்பிலும் பேசிக் கொள்வது என்று முடிவு செய்து இருக்கிறோம்" என்றார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம், சீன அதிபரை இன்னும் சர்வாதிகாரியாகத்தான் நீங்கள் கருதுகிறீர்களா? எனக கேட்டனர். இதற்கு பதிலளித்த ஜோ பைடன், "ஜி ஜின்பிங், கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி, மேலும் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது சீன அரசாங்கம் முற்றிலும் மாறுபட்டது" என்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீன அதிபரை சர்வாதிகாரி என்று ஜோ பைடன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE