காசா: இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரினால் காசாவில் பலி எண்ணிக்கை 9,000-ஐ தாண்டியுள்ளது என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காசாவில் இன்று ஒரேநாளில் மட்டும் 256 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொடங்கிய அக்டோபர் 7 முதல் இதுவரை காசாவில் உயிரிழந்தோர்கள் எண்ணிக்கை மொத்தமாக 9,061 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,760 குழந்தைகள் மற்றும் 2,326 பெண்கள். பாலஸ்தீன சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், 2,600 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் 1,150 குழந்தைகள் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். இவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என தெரிவித்துள்ள அவர், காசாவில் 16 மருத்துவமனைகள் செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
வடக்கு காசாவில் தீவிரமடைந்துள்ள சண்டை: வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை தீவிரமடைந்துவருகின்றன என்று கூறப்படுகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கிகள் வடக்கு காசாவில் ஒரு இடத்தில் மொத்தமாக நிறுத்தப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது என்று அல் ஜசீரா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தரைவழித் தாக்குதலுக்கு மத்தியில் கடந்த சில மணி நேரங்களாக வான்வழித் தாக்குதலையும் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. இஸ்ரேலின் வெளியுறவுத் துறை நிர்வாகி எஜாஸ் ஹைதர் கூறுகையில், "ஹமாஸ் இருக்கும் இடத்தை நோக்கி இஸ்ரேல் ராணுவம் பல முனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்திவருகிறது" எனத் தெரிவித்திருக்கிறார். நேற்றிரவு முதல் வடக்கு காசாவில் நடைபெற்றுவரும் இச்சண்டையில் பல ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
» பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்.11-ல் பொதுத் தேர்தல்
» “ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தேவை” - பைடன் பேச்சும், வெள்ளை மாளிகை விளக்கமும்
தற்காலிக போர் நிறுத்தம் கோரும் பைடன்: காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாலஸ்தீன பகுதிகளில் சிக்கியிருக்கும் அமெரிக்கர்களை மீட்கும்விதமாக இஸ்ரேல் தற்காலிகமாக போரை நிறுத்த வேண்டும் என பேசியிருக்கிறார்.
ரஃபா எல்லை வழியாக இன்றும் வெளியேற்றம்: இரட்டை குடியுரிமை பெற்றவர்களையும், இஸ்ரேல் - ஹமாஸ் போரினால் காயமடைந்தவர்களையும், வெளிநாட்டவர்களையும் காசாவில் இருந்து வெளியேற்றும்விதமாக ரஃபா எல்லை திறந்துள்ளது எகிப்து. இந்த எல்லை வழியாக சுமார் 7000 பேர் வெளியேற்றப்பட இருப்பதாக எகிப்து தெரிவித்துள்ளது. இன்றும் வெளியேற்றம் தொடர்ந்து வருகிறது.
லெபனான் எல்லையில் துப்பாக்கிச் சண்டை: தங்களது ராணுவத்தின் ட்ரோன் லெபனான் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா இயக்கத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலின் ட்ரோன்களை ஹிஸ்புல்லா தாக்குவது இது இரண்டாவது முறையாகும்.
ஜபாலியா அகதிகள் முகாமின்மீது 3-வது தாக்குதல்: காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மூன்றாவது முறையாக இன்று மீண்டும் தாக்கியுள்ளது. முகாமில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். நேற்றும், அதற்கு முன்தினம் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது. மொத்தமாக இந்த மூன்று தாக்குதலில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். 777 பேர் காயமடைந்தனர். மேலும் 120 பேர் காணவில்லை என பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா நகரில் இருந்து செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தரை வழியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது, இஸ்ரேல் பகுதியில் இருந்த வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதுதவிர ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளையும் வீசினர். இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதில், இஸ்ரேலைச் சேர்ந்த சுமார் 1,500 பேரும் காசா பகுதியைச் சேர்ந்த சுமார் 9,061 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை பிணைக் கைதிகளில் 2 அமெரிக்கர்கள் உட்பட 4 பேரை மட்டும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். மேலும் ஒரு ராணுவ வீரரை இஸ்ரேல் படையினர் மீட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
4 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago