“ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தேவை” - பைடன் பேச்சும், வெள்ளை மாளிகை விளக்கமும்

By செய்திப்பிரிவு

டெல் அவில்: இஸ்ரேல் - ஹமாஸ் இரு தரப்புகளுக்கும் இடையில் நடக்கும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியான நிலையில் அதிபரின் பேச்சு குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது. ஹமாஸின் முக்கிய தலைவர்களை குறி வைத்து அழிக்கிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக காசா பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இஸ்ரேல் தாக்குதலில் அதிகமாக அப்பாவி குழந்தைகள், பொதுமக்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைகூட பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் காசா பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாக்க வேண்டும் என ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மினியாபோலிஸ் நகரில் சுமார் 200 பேர் அடங்கிய பொது மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண் அவர் பேச்சில் குறுக்கிட்டு, போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனால் நெருக்கடிக்கு உள்ளான ஜோ பைடன், "ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் இடைநிறுத்தம் தேவை. பிணைக் கைதிகளை மீட்பதற்கு தோதாக கால அவகாசம் தேவை" எனத் தெரிவித்துள்ளார். அதிபர் பைடனின் பேச்சு வைரலான நிலையில் அது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். "வெளிநாட்டினர் வெளியேறும் வகையிலும், பொதுமக்களுக்கு உதவி கிடைக்கும் வகையிலும் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் மனிதாபிமான இடைநிறுத்தம் தேவை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்" என அவர்கள் விளக்கியுள்ளனர்.

பலியாகும் அப்பாவி மக்கள்: காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அக்டோபர் 7 ஆம் தேதி முதல், 3,648 குழந்தைகள் உட்பட, 8,796 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 195 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE