வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்: ஒருவர் உயிரிழப்பு; 100+ காயம்

By செய்திப்பிரிவு

டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு ஜனவரியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக காபந்து அரசை ஏற்படுத்தும் நோக்கில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி வலியுறுத்தி வருகிறது. அப்போதுதான் தேர்தல் நியாயமாக நடைபெறும் என அது கூறி வருகிறது. இதற்கு ஆளும் கட்சியான பங்களாதேஷ் அவாமி லீக் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காபந்து அரசு அமைக்கப்படுவதற்கு சட்டத்தில் இடமில்லை என உச்ச நீதிமன்றம் கூறி இருப்பதாக வங்கதேச அரசும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, டாக்காவின் அனைத்து தெருக்களிலும் அமைதிப் போராட்டம் நடத்த பங்களாதேஷ் தேசியவாத கட்சி அழைப்பு விடுத்தது. இதையடுத்து கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை விட்டு விலக வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்தத் தொடர் போராட்டங்கள் காரணமாக போலீசாருக்கும் பங்களாதேஷ் தேசியவாத கட்சியினருக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன.

காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைத்தனர். இந்த மோதலில், ஒரு போலீசாரின் தலை வெட்டப்பட்டது. மேலும், இந்த மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்களாதேஷ் தேசியவாத கட்சியைச் சேர்ந்த 1,680க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் தேசியவாத கட்சி டாக்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட அதேநேரத்தில், ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு தனியாக ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது. இதனால், டாக்காவில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE