அமெரிக்காவில் 22 பேரை சுட்டுக் கொன்ற நபர் சடலமாக மீட்பு: நடந்தது என்ன?

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் துப்பாக்குச்சூடு நடத்திய ராபர்ட் கார்டு என்ற சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, அடிக்கடி, துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு லீவிஸ்டன் நகரில் உணவகம் மற்றும் கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களை சுற்றிவளைத்த பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணையைத் தொடங்கினர். இதில், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 40 வயதான ராபர்ட் கார்டு என்பது அடையாளம் காணப்பட்டது.

சந்தேக நபராக அறிவிக்கப்பட்ட அவர் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன. அப்போது, குடும்ப வன்முறைக்காக சில மாதங்களுக்கு முன்பு அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் அவர் மனநல மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்தது. முன்னாள் ராணுவ வீரரான ராபர்ட் கார்டு, துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரான ராபர்ட் கார்டு (வயது 40) சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லூயிஸ்டனில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள லிஸ்பன் நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள ஆண்ட்ரோஸ்கோகின் ஆற்றின் அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

மைனே துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிறகு தன்னைத் தானே அவர் சுட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து மைனே ஆளுநர், "ராபர்ட் கார்டினால் இனி யாருக்கும் அச்சுறுத்தல் இல்லை என்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்" என்று சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE