அக்.7 தாக்குதலுக்கு திட்டமிட்ட ஹமாஸ் புலனாய்வுப் பிரிவின் துணைத் தலைவர் கொலை: இஸ்ரேல் பாதுகாப்புப் படை தகவல்

By செய்திப்பிரிவு

டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்பின் புலனாய்வு பிரிவின் துணைத் தலைவர் ஷாதி பாரூத் (Shadi Barud) இஸ்ரேலிய பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மிகத் தீவிரமான பதிலடியைக் கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் தனது அடுத்தடுத்த நகர்வுகளை மிகத் துல்லியமாகவும், அதிக விழிப்புடனும் எடுத்து வைக்கிறது. இதனால், இஸ்ரேலின் கோரத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பு தங்களுடைய முக்கிய படைத் தளபதிகளை அடுத்தடுத்து இழந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் இஸ்ரேல் உடனான போரில் ஹமாஸ் படையின் அப்துல் ரஹ்மான், கலீல் மஹ்ஜாஸ், மற்றும் கலீல் டெத்தாரி ஆகிய மூன்று துணைத் தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஹமாஸ் அமைப்பின் புலனாய்வு பிரிவின் துணைத் தலைவர் ஷாதி பாரூத்தை இஸ்ரேலி பாதுகாப்பு படை கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஷாதி பாரூத் இதற்கு முன்னர், கான் யூனிஸ் என்றப் பகுதியில் பட்டாலியன் குழுவை வழிநடத்தி வந்திருக்கிறார். அதோடு தீவரவாதக் குழுவின் உளவுத்துறை இயக்குநரகத்தில் பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார். கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த பல திட்டங்களை வகுத்து கொடுக்க உதவியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

இதுவரை இஸ்ரேல் மக்கள் 1400 பேர் உயிரிழந்துள்ளனர். 220 பேர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் உள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதலில் காசாவில் 7028 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஹமாஸ் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE