காசா போரில் சேதமடைந்த கப்பல்களுக்கு இழப்பீடு: இஸ்ரேல் உறுதி

By செய்திப்பிரிவு

டெல் அவிவ்: காசா போரின் காரணமாக இஸ்ரேல் கடல் எல்லைக்குள் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்கள் பல சேதமடைந்த நிலையில் அவற்றிற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். பாராக்ளைடர்கள் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்து கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் சுட்டு வீழ்த்தினர். இதுவரை இஸ்ரேலியர்கள் 1400 பேர் உயிரிழந்துள்ளனர். 220 பேர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் வசம் உள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதலில் காசாவில் 7028 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஹமாஸ் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால் ஹமாஸின் இந்த எண்ணிக்கை மீது அமெரிக்கா சந்தேகம் எழுப்பியுள்ளது. பிணைக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டவர்களில் 50 பேர் இஸ்ரேல் தாக்குதலில் இறந்துவிட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஆனால் இதை இஸ்ரேல் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை.

இதுஒருபுறம் இருக்க ஹமாஸை அழித்தொழிப்போம் என்று சூளுரைத்து இஸ்ரேல் முன்னேறி வருகிறது. முழுவீச்சில் தரைவழித் தாக்குதல் நடத்த ஆயத்தமாக இருக்கிறது. தற்போது நடைபெறும் சிறிய தரைவழித் தாக்குதல் வெறும் ஒத்திகை என்று பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.

இந்தச் சூழலில் இஸ்ரேல் கடல் எல்லையில் இருந்த பல கப்பல்கள் சேதமடைந்துள்ளன. இஸ்ரேல் கடல்வழி வர்த்தகத்தையே பிரதானமாக நம்பியிருக்கிறது. உணவுப் பொருட்கள் தொடங்கி தொழில்நுட்ப உதிரி பாகங்கள்வரை இஸ்ரேல் இறக்குமதி செய்கிறது. இதனால் இஸ்ரேல் துறைமுகம் எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடியது. அத்தகைய இஸ்ரேல் கடல் எல்லையில் போர் தொடங்கியபோது பல வெளிநாட்டு வர்த்தகக் கப்பல்கள் நின்றிருந்தன. அவற்றில் பல சேதமடைந்தன.

இந்நிலையில் இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "போர் சேதங்கள் என்பது எதிரி நாட்டின் குண்டுகள், ஏவுகணைகளால் ஏற்படுவது மட்டுமின்றி இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் தாக்குதலின் போது நிகழும் சேதங்களையும் உள்ளடக்கியது என்றே சட்டம் வரையறுத்துள்ளது. ஆகையால் இஸ்ரேல் கடல் எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உள்நாட்டு, வெளிநாட்டு, தனியார் வர்த்தகக் கப்பல்கள் அனைத்துக்கும் நஷ்ட ஈடு வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE