காசா: ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தும்வகையில் இஸ்ரேலிய ராணுவத்தின் தரைப்படைகள் காசா பகுதிக்குள் நேற்று இரவு பெரிய அளவில் ஊடுருவியது என இஸ்ரேலின் ராணுவ வானொலி அறிவிப்பை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்திடும் விதமாக இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கிகள் காசா பகுதிகளுக்குள் நுழைந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
தரைவழித் தாக்குதல் நடத்தும் நோக்கத்தோடு சில வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையைவிட நேற்றிரவு நடத்தப்பட்டது சோதனை பெரியது என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் ராணுவத்தின் வானொலியும் தரைவழி ஊடுருவலை உறுதிப்படுத்தியுள்ளது. போரை நிறுத்த சர்வதேசத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது என அறிவித்த சில மணிநேரங்களில் இஸ்ரேலின் ராணுவத்தின் பீரங்கிப் படை வடக்கு காசாவுக்குள் நுழைந்துள்ளன.
எனினும், சில மணிநேரங்களில் பீரங்கிகள் அனைத்தும் காசாவில் இருந்து பின்வாங்கின. இஸ்ரேல் பாதுகாப்புப் படை இந்த நடவடிக்கையை, 'தரைவழித் தாக்குதலுக்கான ஒத்திகை' எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், "அடுத்த கட்ட போருக்கான ஆயத்தம்" என்றும், சில மணிநேரங்களில் ராணுவ வீரர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி இஸ்ரேலிய பகுதிக்கு திரும்பிவிட்டனர் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
காசா மீது தரைவழித் தாக்குதல்: முன்னதாக, இஸ்ரேல் மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "காசா மீதான தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. எப்போது, எப்படி என்பதை நான் விரிவாகக் கூறமாட்டேன். ஆனால், ஹமாஸின் இலக்குகளை அழிக்க, காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்.
» ‘குண்டு மழைக்கு மத்தியில் குழந்தையை எப்படிப் பெற்றெடுப்போம்?’ - காசா கர்ப்பிணிகளின் கண்ணீர்க் கதை
எங்களது இறையாண்மையை காக்கவும், எங்களின் இருப்புக்காகவும் போரில் ஈடுபட்டுள்ளோம். இந்தப் போரில் இரண்டு அடிப்படை நோக்கங்களை அமைத்துக் கொண்டுள்ளோம். அவை, ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறனை ஒழிப்பது. பிடிபட்டுள்ள பணயக் கைதிகளை மீண்டும் அழைத்துவருவது. இந்த நோக்கங்களை நிறைவேற்ற தேவையான அனைத்தையும் இஸ்ரேல் செய்யும்" எனத் தெரிவித்தார்.
காசாவுக்கு 'உடனடி' உதவிக் கோரும் WHO: போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவுக்கு உடனடி உதவிகள் தேவை என உலக சுகாதார நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, "மருந்துகள், சுகாதார பொருட்கள் இல்லாமல், காசாவின் மருத்துவமனைகள் கற்பனை செய்ய முடியாத மனிதாபிமான பேரழிவின் விளிம்பில் உள்ளன. காசாவுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் தேவை. உதவிகள் கிடைத்தால் மட்டுமே, காசா மீண்டெழ முடியும்" என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
முழுமையான போர் நிறுத்தம் தேவை: அவசரமாக தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை காசாவுக்குள் கொண்டு வருவதற்கு இஸ்ரேல் முழு போர்நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும் என பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல்-மலிகி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், “இம்முறை இஸ்ரேல் நடத்தும் போர் வித்தியாசமானது. இந்த முறை இது பழிவாங்கும் போர்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி காசா எல்லையை கடந்து இஸ்ரேலில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலியர்கள் 1,400 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. கடந்த 2 வாரங்களாக தொடரும் தாக்குதலில் கடந்த திங்கள்கிழமை மட்டும் ஹமாஸ் தீவிரவாதிகளின் 400 இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் பாலஸ்தீனர்கள் 700-க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் அஷ்ரப் அல்-கித்ரா தெரிவித்துள்ளார்.
காசாவில் கடந்த 2 வாரங்களில், திங்கள்கிழமை தான் மிக அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார். இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இருந்து தற்போது வரை, காசாவில் 2,360 குழந்தைகள் உட்பட 6,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
11 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago