இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் | இரு தரப்பும் போரை நிறுத்தி, அமைதி பேச்சுக்கு முன்வர வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலானபோர் கவலை அளிக்கிறது. இருதரப்பும் போரை நிறுத்தி, அமைதிபேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க வேண்டும்’ என்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா நகரில் இருந்து செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளையும் வீசினர். இதற்கு, இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இருதரப்புக்கும் இடையிலான போரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று வெளிப்படையான விவாதம் நடந்தது.

இதில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் துணை நிரந்தர பிரதிநிதி ஆர்.ரவீந்திரா பேசியதாவது:

இஸ்ரேல் மீது கடந்த 7-ம்தேதி நடந்த தீவிரவாத தாக்குதலைவன்மையாக கண்டிக்கிறோம். இத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலில் இரங்கல் தெரிவித்த உலக தலைவர்களில் எங்கள் பிரதமர் மோடியும் ஒருவர். தீவிரவாத தாக்குதலை எதிர்கொண்டுள்ள இந்தஇக்கட்டான நேரத்தில் இஸ்ரேலுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்.

காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீதான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.

இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து நடந்து வரும் போரில்அப்பாவி மக்கள் பலர் உயிரிழப்பது கவலை அளிக்கிறது. இருதரப்பினரும் பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

பாதுகாப்பு, இறையாண்மை: அமைதி ஏற்படவும், நேரடி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவும் உகந்த சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு, இருதரப்பும் போரை நிறுத்த முன்வர வேண்டியது அவசியம் என இந்தியா வலியுறுத்துகிறது.

போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க சர்வதேச சமுதாயத்தினர் மேற்கொண்டுள்ள முயற்சி வரவேற்கத்தக்கது. அந்தவகையில், பாலஸ்தீன மக்களுக்கு மருந்துகள் உட்பட 38 டன் அத்தியாவசிய பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுப்பியுள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினைக்கு சுமுக தீர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் இருதரப்பினருடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும். குறிப்பாக, இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான பாலஸ்தீனம் அமைய வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நோக்கம். அதேநேரம் இஸ்ரேலின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அவசியம்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மீண்டும் அமைதிபேச்சுவார்த்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE