மாயமான சீன பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்: 2 மாதங்களுக்குப் பின்னர் அறிவித்தது அரசு

By செய்திப்பிரிவு

பீஜிங்: 2 மாதங்களுக்கு முன்னர் மாயமான சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லி ஷங்ஃபூ அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு வெளியுறவு அமைச்சர் கின் காங் எவ்வித விளக்கமும் இல்லாமல் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக வாங் யி புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். தற்போது ராணுவ அமைச்சரும் நீக்கப்பட்டுள்ளது அந்நாட்டு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது லி ஷாங்ஃபூ பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி பின்னர் அவர் பொது நிகழ்வில் எதிலும் தென்படவில்லை. அவர் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இதனையடுத்து அவர் காணாமல் போனார் என்ற செய்திகளும் சர்வதேச ஊடகங்களில் எழுந்தன. இந்த நிலையில் அவர் நீக்கப்பட்டதாக அதிகாரபூர்வமக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் லி ஷாங்ஃபூ நீக்கம் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டு தற்போது அது பற்றிய தகவல் அதிகாரபூர்வமாக சீன சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக புதிதாக யார் அந்தப் பதவியை ஏற்பார்கள் என்பது குறித்து அரசு எந்தத் தகவலும் வெளியிடவில்லை.

அமெரிக்க தடை காரணமா? அதிபர் ஜி ஜின்பிங்கின் அபிமானத்துக்குஉரியவராகவே பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபூ இருந்ததாகத் தெரிகிறது. அதிபர் ஜி ஜின்பிங் அமைச்சர்களின் விசுவாசத்தை வேறெதையும்விட சீர்தூக்கிப் பார்க்கும் பழக்கம் கொண்டவராக அறியப்படுகிறார். பொதுத்துறை, தனியார் துறைகளில் ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் போக்குடையவர். அதனால் அவர் சிலர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். சீனப் பொருளாதார வீழ்ச்சி மற்றும் அமெரிக்காவுடன் வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் தைவான் பிரச்சினைகளில் நிலவும் மோதல் போக்கு ஆகியனவற்றால் அதிபர் ஜி ஜின்பிங் நிறைய விஷயங்களில் கெடுபிடி காட்டி வருகிறார்.

இந்நிலையில், ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கியதை மேற்பார்வை செய்ததை காரணத்துக்காக பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபூவுக்கு அமெரிக்கா தனது நாட்டுக்குள் நுழையத் தடைவிதித்தது. அதேபோல் தைவானுக்கு ஆயுதங்கள் வழங்கியதால் அமெரிக்காவுடன் சீனாவும் அதிருப்தி போக்கைக் கடைபிடித்தது. இந்தச் சூழலில் அடுத்த வாரம் அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் பிரதிநிதிகள் சிலர் பீஜிங் வருகின்றனர். பிராந்திய பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக்காக அக்குழு வரவுள்ளது. இச்சூழலில் அமெரிக்கத் தடை பெற்ற பாதுகாப்பு அமைச்சரை லி ஷாங்ஃபூவை நீக்கியதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. இது அந்நாட்டு அரசு ஊடகமாக சினுவா பத்திரிகையிலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE