இஸ்ரேல் சென்றடைந்தார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

By செய்திப்பிரிவு

டெல் அவிவ்: இஸ்ரேல்- ஹமாஸ் போர் உக்கிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேலுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இஸ்ரேல் தலைநகருக்கு செவ்வாய்க்கிழமை (இன்று) சென்றுள்ளார்.

மிகவும் தீவிரமடைந்துள்ள இஸ்ரேல் - ஹமாஸ் போர் 18 வது நாளை எட்டியுள்ளது. காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேலுக்கு சென்று, தங்களுடைய முழு ஆதரவை இஸ்ரேலுக்கு வழங்குவதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கு தனது முழு ஆதரவை தெரிவிக்கும் வகையில் டெல் அவிவிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வந்துள்ளார். அங்கு அவர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் மற்றும் காஸாவில் பிணைக் கைதிகளின் குடும்பத்தினரை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இணைந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE