“நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு மீட்டெடுப்பேன்” - பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சபதம்

By செய்திப்பிரிவு

லாகூர்: பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு மீட்டெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் காரணமாக பாகிஸ்தான் நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு லண்டன் சென்ற முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தற்போது நாடு திரும்பியுள்ளார். வரும் ஜனவரியில் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டு அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிகிறது.

“மக்களே எனது ஆட்சி காலத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளின் இருந்த விலையை இன்றைய விளையாடும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதற்காக தான் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேனா? நீங்களே சொல்லுங்கள்? நாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு மீட்டெடுப்பேன்.

எங்களது 1990 பொருளாதார மாடலை ஏற்றிருந்தால் நாட்டில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கும். வறுமை என்ற பேச்சுக்கே இடம் இருந்திருக்காது. ஆனால், இன்றைய நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. நான் பல ஆண்டுகளுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். இருந்தாலும் அந்த அன்பில் இமியளவும் மாற்றமில்லை. உங்கள் அன்பை உங்களது கண்களின் வழியே நான் பார்க்கிறேன். எனது வலிகள் அனைத்தையும் மறக்கிறேன். ஆனாலும் அந்த காயத்தின் வடு அப்படியே என்னுள் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது அம்மா, அப்பா மற்றும் மனைவிக்கு இறுதி அஞ்சலி கூட செலுத்த முடியாத சூழலுக்கு ஆளானேன்.

பாகிஸ்தானை கட்டமைத்தவர்கள் நாம். அணு ஆயுத வல்லமை சக்தியாக உருவாக்கியது நாம். மக்களுக்கு தேவையான மின்சாரத்தை மலிவான விலையில் அளித்தோம். பாகிஸ்தானுக்கு எதிராக எந்த செயலையும் நான் செய்தது கிடையாது. அணு ஆயுத சோதனையின் போது 1990-களில் அமெரிக்க இடையூறை தீரத்துடன் எதிர்கொண்டேன். எனது இடத்தில் யாரேனும் இருந்திருந்தால் அதை செய்திருக்க முடியுமா” என லாகூரில் நடைபெற்ற பேரணியில் அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE