ஹமாஸுக்கும், புதினுக்கும் அண்டை நாடுகளை அழிப்பதே வேலை - அமெரிக்க அதிபர் பைடன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ஹமாஸுக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் அண்டையில் உள்ள ஜனநாயக தேசங்களை அழித்தொழிப்பதே வேலையாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் இருந்து தேச மக்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றினார்.

அந்த உரையில் அவர், "ஹமாஸ் மற்றும் புதினின் தீவிரவாதமும், கொடுங்கோன்மையும் வெவ்வேறு அச்சுறுத்தல்களைக் கொண்டவை ஆனால் இரண்டுக்குமே அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை அழித்தொழிப்பதே இலக்கு. இதுபோன்ற சர்வதேச ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் அதனால் ஏற்படும் மோதல்களும், குழப்பங்களும் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். இதனால் பாதிப்புகள் அதிகமாகும்.

ஆகையால் இந்தச் சூழலில் இத்தகையப் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் பெருமளவில் நிதியுதவி அளிக்க வேண்டும். அதற்காக நான் வலியுறுத்துவேன். இந்த நிதியுதவி அமெரிக்காவின் எதிர்கால நலனுக்கான முதலீடு என்பதைப் புரியவைப்பேன்.

இது புத்திசாலித்தனமான முதலீடு. இந்த முதலீடுகளால் பல ஆண்டுகளுக்கு வருங்கால அமெரிக்க சந்ததிகள் பலன் பெறுவர். அமெரிக்காவின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதால் கிடைக்கும் பலன் அது. அமெரிக்கத் தலைமைதான் இந்த உலகை ஒன்றிணைத்து வைத்துள்ளது. நமது நட்புறவுகள் தான் நமக்கான பாதுகாப்பு. நம் தேசத்தின் மதிப்பீடுகளால் ஈர்க்கப்பட்டு பல நாடுகள் நம்முடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்றன." என்றார். இஸ்ரேல் சென்றுவந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்காக இவ்வாறாக உரையாற்றியுள்ளார். பைடனின் திடீர் உரை உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

மேலும் அவர் தனது உரையில் ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அமெரிக்கர்களை பாதுகாப்பாக மீட்பதே முதல் கடமை என்றார். ஹமாஸ் தீவிரவாதிகள் வசம் 203 பேர் பிணைக் கைதிகளாக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய மக்கள் ஸ்திரமாக, உறுதியாக, மீண்டெழும் துணிவோடு இருக்கின்றனர். அதேவேளையில் தங்கள் நாட்டின் மீதான தாக்குதலால் வேதனையுடன் உள்ளனர். அதிர்ச்சியும், ஆத்திரமும் அவர்களிடம் மேலோங்கியுள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விவரித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் உறுதி: முன்னதாக நேற்று இஸ்ரேல் சென்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், "சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டு இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இங்கிலாந்து வழங்கும். ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகள்விடுவிக்கப்பட வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் இஸ்ரேலின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனினும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இஸ்ரேல் ராணுவம் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருகிறது. இருள் சூழ்ந்த இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து ஆதரவாக இருக்கும்" என்று கூறியிருந்தார்.

பிரதமர் மோடி இரங்கல்: பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் "பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பேசினேன். காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். இந்த உரையாடலின்போது, பாலஸ்தீன பகுதிகளில் வன்முறையினால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதையும், பயங்கரவாம் குறித்த கவலைகளை பகிர்ந்துகொண்டோம். மேலும் இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால கொள்கை நிலைப்பாடும் மஹ்மூத் அப்பாஸிடம் தெரிவிக்கப்பட்டது. பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து அனுப்பும்" எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஹாமாஸ் போர் 13வது நாளை எட்டியுள்ள நிலையில் இருதரப்பிலும் சேர்த்து உயிரிழப்பு 5000ஐ கடந்துள்ளது. காசாவில் மட்டும் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்