“இஸ்ரேலுக்கு இங்கிலாந்து முழு ஆதரவு” - நெதன்யாகுவிடம் ரிஷி சுனக் நேரில் உறுதி

By செய்திப்பிரிவு

டெல் அவிவ்: ஹமாஸுக்கு எதிரான மோதலில் இஸ்ரேல் வெற்றி பெற இங்கிலாந்து விரும்புவதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த அவர், இங்கிலாந்தின் முழுமையான ஆதரவு இஸ்ரேலுக்கு இருப்பதை நேரில் தெரிவித்தார். இதையடுத்து, இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ரிஷி சுனக், "இதுபோன்ற மோசமான சூழ்நிலையில் நான் இங்கு இருப்பதற்கு வருந்துகிறேன். கடந்த இரண்டு வாரங்களில் எந்த நாடும், எந்த மக்களும் சகித்துக்கொள்ளக் கூடாத கொடூர தாக்குதலை இந்த நாடு சந்தித்துள்ளது. தீவிரவாத தாக்குதலால் உயிரிழந்த மக்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இங்கிலாந்து மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்ரேலின் உரிமையை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு தன்னை தற்காத்துக் கொள்ள, ஹமாஸ் அமைப்பை நிர்மூலமாக்க இஸ்ரேலுக்கு எங்கள் ஆதரவு உண்டு. பாலஸ்தீன மக்களும் ஹமாஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். மனிதாபிமான உதவிக்காக காசாவுக்கான பாதைகள் திறக்கப்படுவதை உறுதிசெய்ய நீங்கள் எடுத்த நேற்றைய முடிவை நான் வரவேற்கிறேன். நீங்கள் அந்த முடிவை எடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்தார். முன்னதாக பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அரபு நாடுகளுடன் இஸ்ரேல் மேற்கொண்ட அமைதி நடவடிக்கையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே ஹமாஸ் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம்சாட்டினார்.

முன்னதாக, காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை அடுத்து, அங்கு இருதரப்பு மோதல் அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்; 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 200 பேரை ஹமாஸ் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. இதனிடையே, இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு வேகமாக அதிரித்து வருகிறது. அங்கு இதுவரை 3,478 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 12,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஹமாஸின் தாக்குதலை அடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தன. அமெரிக்கா தனது போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பியது. மேலும், அமெரிக்க வெளியுறவு அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சரும் இஸ்ரேலுக்குச் சென்றனர். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், புதன்கிழமை இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர், அதிபர் உள்ளிட்டோரைச் சந்தித்து அமெரிக்காவின் ஆதரவை நேரில் தெரிவித்தார். அதோடு, உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் இன்றி அவதிப்படும் காசா மக்களுக்கு உதவிப் பொருட்கள் செல்ல இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து, தேவையான அளவுக்கு உதவிப் பொருட்கள் எகிப்து வழியாக காசாவுக்கு கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்தது.

கடந்த 7-ம் தேதி இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு வட கொரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்தது. தோல்பட்டையில் வைத்துக்கொண்டு இயக்கக்கூடிய எஃப்-7 ராக்கெட்டுக்களை ஹமாஸ் பயன்படுத்தி உள்ளதாகவும், இவை வடகொரியாவைச் சேர்ந்தவை என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எனினும், இதனை வடகொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE