ஹமாஸ் அமைப்பின் முக்கிய பெண் தலைவர் கொலை - இஸ்ரேல் ராணுவம் தகவல்

By செய்திப்பிரிவு

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் முதல் பெண் தலைவர் ஜமிலா அப்துல்லா தாஹா அல் சான்டி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்திருக்கிறது.

எப்போது, எங்கு போர் நடந்தாலும் சர்வதேச நாடுகளின் அதிகார மோதலில் பொதுமக்களின் உயிர்களே காவு வாங்கப்படுகின்றன. கடந்த 7-ஆம் தேதி இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, தொடரும் இஸ்ரேலின் பதில் தாக்குதல் காரணமாக, வடக்கு காசாவை விட்டு லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். காசாவுக்கான உணவு, மின்சாரம், குடி தண்ணீர் என அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.

இதனால் அகதிகளாக மக்கள் அண்டை நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர். இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் தலைவர்கள் அந்த நாட்டுக்கு நேரில் சென்று இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் ஹமாஸைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் முதல் பெண் தலைவர் ஜமிலா அப்துல்லா தாஹா அல் சான்டி (Jamila Abdallah Taha al-Shanti) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியான தகவலின்படி, ஜமிலா அப்துல்லா பாலஸ்தீன சட்ட சபையின் உறுப்பினர் ஆவார். அதுமட்டுமல்லாமல் ஹமாஸின் முக்கியத் தலைவரான அப்தெல் அஜிஸ் அல்-ரான்டிசியின் மனைவியும் ஆவார். ஹமாஸ் வானொலியை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE