காசா மருத்துவமனையில் ராக்கெட் குண்டு வீசியதில் 500 பேர் உயிரிழப்பு: ஹமாஸ் தீவிரவாதிகள் மீது குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

டெல் அவிவ்: காசா மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் வீசிய ராக்கெட்கள் தவறுதலாக விழுந்து வெடித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது. இஸ்ரேலுக்கு வந்து அந்நாட்டு அதிபர், பிரதமரை சந்தித்து ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர்
ஜோ பைடனும் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். தரை வழியாகவும் இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து, ஏராளமானோரை சுட்டுக் கொன்றதுடன், சுமார் 200 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக சிறைபிடித்தனர்.

இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து வடக்கு காசா பகுதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,400 பேரும் காசா பகுதியில் சுமார் 3 ஆயிரம் பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காசா பகுதியில் உள்ள அல் ஆஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. இதில், மருத்துவமனையில் இருந்த சுமார் 500 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் ராக்கெட் குண்டு தாக்குதல்தான் இதற்கு காரணம் என ஹமாஸ் தீவிரவாதிகள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால், இத்தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தவில்லை என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி பட தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவிய ராக்கெட் குண்டுகள்தான் தவறுதலாக மருத்துவமனையை தாக்கி இருக்கிறது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக இஸ்ரேல் ராணுவம் சில வீடியோ காட்சிகளை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வீடியோ, மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு முன்பும் பின்பும் உள்ள நிலவரத்தை காட்டுகிறது. மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் ராக்கெட் குண்டுகள் விழுந்ததும், அங்குள்ள கட்டிடம் தீப்பிடித்து எரிவதை ஒரு வீடியோ காட்டுகிறது. தங்கள் ஆயுதங்கள் குறிப்பாக ராக்கெட்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை, தாக்கிய இடத்தில் பள்ளங்களை உருவாக்குபவை என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் ராக்கெட்கள் தாக்கிய இடத்தில் பள்ளங்கள் எதுவும் விழவில்லை என்பதால் ஹமாஸ் தீவிரவாதிகளின் ராக்கெட்தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று மதியம் தலைநகர் டெல் அவிவ் விமான நிலையம் வந்தடைந்தார். பலத்த பாதுகாப்புக்கு நடுவே விமானத்தில் இருந்து இறங்கிய அவர், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் நெதன்யாகுவை கட்டித் தழுவினார். பின்னர் நெதன்யாகு, பைடன் ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பைடன் கூறியதாவது:

அமெரிக்கா யார் பக்கம் நிற்கிறது என்பதை இஸ்ரேல் மக்களும் உலக மக்களும் அறிந்து கொள்வதற்காகவே இங்கு வந்துள்ளேன். இஸ்ரேலின் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை ஹமாஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். நூற்றுக் கணக்கானோரை பிணைக் கைதிகளாக சிறைபிடித்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஹமாஸ் தீவிரவாதிகள், ஐ.எஸ். தீவிரவாதிகளைவிட மோசமான அட்டூழியங்களை செய்துள்ளனர்.

காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகளை வீசியது தொடர்பான செய்தியை அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். எனக்கு தெரிந்தவரை, இந்த சம்பவத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE