டெல் அவிவ்: "எகிப்திலிருந்து காசாவுக்கு வரும் மனிதாபிமான பொருட்களை இஸ்ரேல் தடுக்காது" என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவை இஸ்ரேல் எடுத்துள்ளது.
முன்னதாக, இன்று இஸ்ரேல் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதாக பேசினார். பின்னர், காசாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் வகையில் செயல்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதன்படி, "எகிப்திலிருந்து வரும் மனிதாபிமான பொருட்களை இஸ்ரேல் தடுக்காது. அதேநேரம், எங்கள் பிணைக் கைதிகள் திருப்பி அனுப்பப்படாத வரையில், இஸ்ரேல் எல்லையில் இருந்து காசாவிற்கு மனிதாபிமான பொருட்களை இஸ்ரேல் அனுமதிக்காது. ஆனால் எகிப்தில் இருந்து வரும் உதவிகளை தடுக்காது" என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போருக்கு விதிகள் உள்ளன: ஐ.நா.வின் துணைப் பொதுச்செயலாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் பேசுகையில், "ஆயுத மோதலில் ஈடுபடும் அனைத்து தரப்பினரும் பொதுமக்களையும் அவர்கள் உடமைகளையும் பாதுகாக்க வேண்டும். எந்தவொரு தாக்குதலிலிருந்தும் மக்களை காப்பாற்ற தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும். சர்வதேச சட்டம் மருத்துவ பணியாளர்களுக்கு குறிப்பிட்ட பாதுகாப்புகளை வழங்குகிறது. காயமடைந்தவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சேவையை பெறுவதை உறுதி செய்வதற்கான வசதிகளை வழங்குகிறது. போருக்கென விதிகள் உள்ளன. அதை பின்பற்ற வேண்டும்" என இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.
காசாவில் தொடரும் தாக்குதல்: காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி வருகிறது என அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய காசாவின் டெய்ர் அல்-பாலாவில் பகுதிகளிலும், அல்-துஃபா சுற்றுப்புறத்தில் உள்ள மசூதியையும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை மீதான தாக்குதல்: காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் குறைந்தது 500 பேர் உயிரிழந்துவிட்டதாக காசா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த வான் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என ஹமாஸ், பாலஸ்தீன அதிகாரிகள் மற்றும் பிற நாடுகள் சிலவும் குற்றம்சாட்டியுள்ளன. ஆனால், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் என்ற இயக்கம்தான் காரணம் என இஸ்ரேல் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
காசா பலி 3,300: இஸ்ரேல் 11 நாட்களாக மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரை காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,300 ஆக அதிகரித்துள்ளது என பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் 1,300 பேர் கொல்லப்பட்டதும், ஹமாஸின் பிடியில் 199 பேர் பிணைக் கைதிகளாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடரும் தாக்குதல்: இஸ்ரேல் ராணுவம் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் இன்று 12-வது நாளாக நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள கான் யூனிஸ், ரஃபா உட்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.
இஸ்ரேல் ராணுவ மூத்த தளபதி மைக்கேல் தற்போது இஸ்ரேலில் முகாமிட்டுள்ளார். அமெரிக்காவின் முப்படைகளை சேர்ந்த 2,000 வீரர்கள் விரைவில் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட உள்ளனர். இதுகுறித்து அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்க வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள். ஆனால், இஸ்ரேல் ராணுவத்துக்கு தேவையான ஆலோசனைகள், உதவிகளை வழங்குவார்கள்” என்று தெரிவித்தன.
இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட், டெல் அவிவ் நகரில் நேற்று கூறும்போது, “ஹமாஸ் தீவிரவாதிகள் மீதான போர் தீவிரமடைந்து வருகிறது. தற்போது அடுத்தகட்ட போருக்கு தயாராகி வருகிறோம். இது தரைவழி தாக்குதல் என்று எல்லோரும் கூறி வருகின்றனர். ஆனால் இது வேறு மாதிரியான போராக இருக்கும்” என்றார்.
இதனிடையே, ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கொமேனி கூறும்போது, “காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago