காசா மருத்துவமனை தாக்குதல் | “உண்மைக்காக காத்திருக்க வேண்டும்” - இங்கிலாந்து

By செய்திப்பிரிவு

லண்டன்: காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் நிலையில், இதுதொடர்பான உண்மைகள் தெரியவரும் வரை காத்திருக்க வேண்டும் என்று இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

காசா நகரத்தில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதலை தாங்கள் நிகழ்த்தவில்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான போர், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில், ஏவுகணைத் தாக்குதலாக ஆரம்பித்த போர், தீவிரமடைந்து வருகிறது. இன்னும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர். மேலும், பலர் தங்களது உடைமைகள், வாழ்விடங்களை இழந்து சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழலில், இஸ்ரேல் - ஹமாஸ் போரை அடுத்து, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவுக்கு சென்றிருக்கிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், “காசா மருத்துவமனை மீதான தாக்குதலால் நான் மிகுந்த வேதனையும், அதேநேரம் கோபமும் அடைந்துள்ளேன். ஹமாஸ் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ், “காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான உண்மைகள் தெரியவரும்வரை காத்திருக்க வேண்டும். நேற்றே இது தொடர்பாகப் பலரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர். இதைத் தவறாகப் புரிந்துகொள்வது இன்னும் அதிகமான உயிர்களை ஆபத்தில் ஆழ்த்திவிடும். உண்மைகளுக்காகக் காத்திருங்கள். அதன்பிறகு இது பற்றித் தெளிவாகவும் துல்லியமாகவும் புகாரளிக்கவும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மருத்துவமனை மீதான தாக்குதலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ள நிலையில், அவர் பொய் சொல்கிறார் என்று ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE