“என்னை சீக்கிரம் இங்கிருந்து விடுவியுங்கள்” - ஹமாஸ் வெளியிட்ட வீடியோவில் இஸ்ரேல் பிணைக் கைதி உருக்கம்

By செய்திப்பிரிவு

காசா: கடந்த வாரம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மோதல் வெடித்து தொடரும் நிலையில், ஹமாஸ் தீவிரவாத குழுவினர் முதல் முறையாக இஸ்ரேல் பெண் பிணைக் கைதி ஒருவரின் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதனை 'ஜெருசலேம் போஸ்ட்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேலும், 'ஜெருசலேம் போஸ்ட்' தனது செய்தியில், அந்த வீடியோ ஹமாஸ்களின் அரபிக் டெலிகிராம் சேனலில் பகிரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்த வீடியோவில் பேசும் இளம் பெண் தன்னை மியா ஷெம் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவர், "நான் ஷோஹமைச் சேர்ந்த மியா ஷெம். நான் இப்போது காசாவில் இருக்கிறேன். சனிக்கிழமை காலையில் நான் ஸ்டெரோட்டில் இருந்து திரும்பினேன். நான் ஒரு விருந்தில் இருந்தேன். எனது கையில் பலமான காயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக இங்குள்ள (காசா) மருத்துவமனையில் எனக்கு 3 மணிநேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இங்குள்ளவர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள், மருந்துகள் வழங்குகிறார்கள், எல்லாம் நலமாகவே இருக்கிறது. நான் கேட்பது எல்லாம் ஒன்றுதான் நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என்னை என் பெற்றோரிடம் சேர்த்து விடுங்கள். சீக்கிரமாக என்னை இங்கிருந்து விடுவியுங்கள்" என்று உள்ளூர் மொழியில் பேசியிருக்கிறார்.

ஹமாஸ் வீடியோ பற்றி இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது ட்விட்டரில், ஹமாஸ் தனது வீடியோவில் தன்னை ஒரு மனிதாபிமான குழுவாக அடையாளப்படுத்த முயற்சித்துள்ளது. இஸ்ரேலியர்கள் அல்லாத பிணைக் கைதிகள் அனைவரும் விருந்தினர்களாக நடத்தப்படுவார்கள். காலம் கனியும்போது விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. ஆனால் ஹமாஸ் ஒரு மோசமான தீவிரவாத அமைப்பு. இஸ்ரேலின் குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள்,வயதானவர்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களைக் கடத்தியது, கொலை செய்ததற்கு ஹமாஸே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளது.

முன்னதாக. கடந்த அக்.7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது. 199 இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டினர் ஹமாஸ் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இஸ்ரேலின 75 ஆண்டு கால வரலாற்றில் அந்நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே நாளில் அதிக மக்கள் கொல்லப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE