ஹிஸ்புல்லா தாக்குதல் தொடர்ந்தால் லெபனானை அழிப்போம்: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலின் வடக்கு எல்லை பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஏவுகணை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு கருதி லெபனானை ஒட்டிய இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் 28 நகரங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல், டெல் அவிவ் நகரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஈரானின் தூண்டுதலின்பேரில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள், பீரங்கிகள் குவிக்கப்பட்டு உள்ளன.

ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் தாக்குதலை லெபனான் அரசு தரப்பு தாக்குதலாகவே கருதுகிறோம். லெபனானுடன் நாங்கள் போரிட விரும்பவில்லை. அதேநேரம் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் லெபனானை அழித்துவிடுவோம்.

இவ்வாறு டேனியல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE