காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் பதிலடி: ஈரான் அமைச்சர் உறுதி

By செய்திப்பிரிவு

தெஹ்ரான்: காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

சர்வதேச போர் விதிகளை மீறி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் மறைமுகமாக போரில் ஈடுபட்டு வருகிறது. காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நிறுத்தாவிட்டால் அந்த நாட்டுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். மிகப்பெரிய பூகம்பத்தை இஸ்ரேல் சந்திக்கும். இவ்வாறு ஈரான் அமைச்சர் ஹூசைன் அமீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அந்த நாட்டில் ஓர் அரசியல் அமைப்பாக செயல்படுகிறது. இதனை மேற்கத்திய நாடுகள் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். அந்த அமைப்பிடம் ஈரான், ரஷ்ய தயாரிப்பு பீரங்கி, ஆயுதங்கள் உள்ளன. அதோடு ஹிஸ்புல்லாவிடம் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் உள்ளன. இதன்மூலம் இஸ்ரேல் மீது தினமும் 3,000 ஏவுகணை குண்டுகளை வீசும் திறன் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது இஸ்ரேலின் வடக்கு பகுதி எல்லைகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதோடு சிரியாவில் ஆட்சி நடத்தும் அதிபர் ஆசாத்துக்கும், ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் ஈரான் தரப்பில் ஆயுத உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இஸ்ரேல் எல்லையை ஒட்டி சிரியா அமைந்துள்ளது. அந்த நாட்டை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE