இஸ்ரேலுக்கு சவாலாக இருக்கும் ஹமாஸின் சுரங்கப்பாதை

By செய்திப்பிரிவு

டெல் அவிவ்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல் உச்சம் தொட்டுள்ளது. ஹமாஸ் தீவிரவாத அமைப்பை ஒட்டுமொத்தமாக அழிக்கும் முயற்சியில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் அதிநவீனதொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. எனினும், ஹமாஸை எதிர்கொள்வது இஸ்ரேலுக்கு மிகுந்த சவாலாக உள்ளது. அதற்குக் காரணம், ஹமாஸின் ரகசிய சுரங்கப் பாதைகள்.

ஹமாஸ் அமைப்பு காசா நகரின் அடியில் மிகப் பெரிய ரகசிய சுரங்கப் பாதைகளை அமைத்துள்ளது. இவை பூமியின் மேற்பரப்பிலிருந்து 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட் டிருப்பதாகவும் இவற்றின் நீளம் 500 கிமீ வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. காசா நகரின் அடியில் கிளை பரப்பும் இந்த ரகசிய சுரங்கப் பாதைகள் இஸ்ரேல் வரையில் செல்கின்றன.

ஹமாஸ் அமைப்பினரின் மறைவிடமாக இந்தச் சுரங்கப் பாதைகள் உள்ளன. தங்கள் ஆயுதங்களை அவர்கள் இங்கு பதுக்கி வைத்துக்கொள்கின்றனர். இப்பாதைகளின் வழியாகவே, ஹமாஸ் அமைப்பினர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்கின்றனர். ஹமாஸால்பிடிக்கப்படும் பிணைக்கைதிகள் இங்கு மறைத்து வைக்கப்படுகின்றனர். இந்த ரகசிய சுரங்கப் பாதைகளுக்கு பல இடங்களில் நுழைவாயில்கள் உள்ளன. முக்கியமாக காசா நகரில் வீடுகளின் உள்ளேயும் இந்தச் சுரங்கப் பாதைகளுக்கான வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. காற்று வருவதற்கான வழிகள், மின்சார வசதிகள் உள்ளன.

இஸ்ரேல் ராணுவத்தால் இந்தச் சுரங்கப் பாதைகளை முழுமையாக அடையாளம் காண முடியவில்லை. இந்தச் சுரங்கப் பாதைகளை அடைக்க 2014-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் அரசு 1 பில்லியன் டாலருக்கு மேல் செலவிட்டுள்ளது. எனினும், இப்பாதைகளின் முழுமை யான கட்டமைப்பை இஸ்ரேலால் புரிந்துகொள்ள முடியவில்லை.

100 கிலோ மீட்டர் அளவில் இந்த ரகசிய சுரங்கப் பாதைகளை தாங்கள் அழித்துவிட்டதாக 2021-ம் ஆண்டு இஸ்ரேல் கூறியது. அதற்கு பதிலளித்த ஹமாஸ், சுரங்கப் பாதை 500 கிலோ மீட்டருக்கும் மேலானது. இஸ்ரேல் அழித்திருப்பது சொற்ப மான பகுதிதான் என்று கூறியது.

தற்போதைய மோதலில் ஹமாஸின் பாதுகாப்பு இடமாக இந்த சுரங்கப் பாதைகள் உள்ளன. இந்தச் சூழலில் அவற்றை அடையாளம் கண்டு தகர்ப்பது இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE