பாலஸ்தீனத்தின் பின்லேடன் - யாயா சின்வார்

By செய்திப்பிரிவு

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் ஒசாமா பின்லேடன் என்று அழைக்கப்படும் யாயா சின்வாரை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக தேடி வருகிறது.

கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்குப் பகுதி நகரங்கள் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும்மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் யாயா சின்வார் செயல்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டி உள்ளது.

யார் இவர்? பாலஸ்தீனத்தின் காசா பகுதி கான் யூனிஸ் நகரை சேர்ந்தவர் யாயா சின்வார். கடந்த 1962-ம் ஆண்டு பிறந்த அவர், காசா இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தில் அரபி மொழியில் இளநிலை பட்டம் பெற்றார். இளவயது முதல் ஹமாஸ் அமைப்பில் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தார்.

இஸ்ரேலிய வீரர்கள் சிலரை கொலை செய்த குற்றத்துக்காக கடந்த 1982-ம் ஆண்டில் யாயா சின்வார் கைது செய்யப்பட்டார். இஸ்ரேல் நாட்டின் நீதிமன்றத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரண மாக சுமார் 24 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்தார்.

கடந்த 2006-ம் ஆண்டில் ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த இஸ்ரேலிய வீரர் கிலாத் என்பவரை விடுதலை செய்ய யாயா சின்வாரை இஸ்ரேல் அரசு விடுதலை செய்தது.

அடுத்த சில ஆண்டுகளில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவராக சின்வார் உருவெடுத்தார். பாலஸ்தீனத்தின் ஒசாமா பின்லேடன் என்று அவர் அழைக்கப்படுகிறார். தற்போது ஹமாஸ்அமைப்பின் 2-வது பெரிய தலைவராக அவர் பதவி வகிக்கிறார். ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் காசா முனை பகுதியில் இல்லை. அவர் கத்தார் தலைநகர் தோஹாவில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலில் காசா முனை பகுதியின் நிர்வாகம் முழுவதையும் யாயா சின்வார் கவனித்து வந்தார். கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அவர் மூளையாக செயல்பட்டார் என்று இஸ்ரேல் ராணுவம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

தாக்குதலில் தொடர்புடைய ஹமாஸ் அமைப்பின் 6 மூத்த கமாண்டர்களை இஸ்ரேல் ராணுவம் வான் வழி தாக்குதல் மூலம் அழித்துள்ளது. இதேபோல யாயா சின்வாரும் வெகுவிரைவில் கொல்லப்படுவார் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் உளவுப் பிரிவு அதிகாரிகள், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE