டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று இரவு தரைவழி தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் 2 மூத்த தளபதிகள் கொல்லப்பட்டனர்.
கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது தரை, கடல், வான் வழியாக தாக்குதல் நடத்தினர். அன்றைய தினம்இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. சுமார் 1,200 ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் நுழைந்து ஏராளமான இஸ்ரேலியர்களை சுட்டுக்கொன்றனர். பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே நேற்று 8-வது நாளாக போர் நீடித்தது.மேற்குகரை பகுதியில் இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் 11 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,300 பேர் உயிரிழந்துள்ளனர். 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் அதிகாரபூர்வ தலைநகராக ஜெருசலேம் அறிவிக்கப்பட்ட போதிலும் இப்போதுவரை அந்த நாட்டின் தலைநகராக டெல் அவிவ் நீடிக்கிறது. டெல் அவிவ் நகரை குறிவைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு சுமார் 250 ஏவுகணை குண்டுகளை வீசினர். இதனால் டெல் அவிவ் நகரில் பதற்றமான சூழல் உருவானது.
இஸ்ரேலின் ஆஸ்கெலான், ரெகோவாட் நகரங்களை குறிவைத்தும் ஹமாஸ் தீவிரவாதிகள் 200-க்கும் மேற்பட்ட ஏவுகணை குண்டுகளை வீசினர். மேலும் இஸ்ரேலின் இஸ்கோல் பகுதி ராணுவ முகாமை குறிவைத்து பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டன. இதில் சிலர் காயமடைந்தனர்.
இஸ்ரேலின் தெற்கு பகுதி நகரங்களை குறிவைத்து ஹமாஸ்தீவிரவாதிகள் தொடர்ந்து ஏவுகணை குண்டுகளை வீசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்காரணமாக இஸ்ரேலின் தெற்கு பகுதி நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி உள்ளனர்.
காசா மக்கள் வெளியேறினர்: பாலஸ்தீனத்தின் வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் உள்ளன. அவற்றை முழுமையாக அழிக்க இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக வடக்கு காசா பகுதியில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் 24 மணி நேரத்தில் தெற்கு காசா பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் கெடு விதித்தது.
இந்த கெடு நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்தது. எனினும் மனிதாபிமான அடிப்படையில் நேற்று மாலை 4 மணி வரை (இந்திய நேரப்படி மாலை 6.30 மணி) வடக்கு காசா பகுதிமக்கள் பாதுகாப்பாக வெளியேற காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதன்படி சுமார் 4 லட்சம் மக்கள்வடக்கு காசாவில் இருந்து வெளியேறி தெற்கு காசாவில் தஞ்சமடைந்து உள்ளனர். கார்கள்,கழுதை வண்டிகள் மற்றும்பாதசாரிகளாக அவர்கள் தெற்குகாசாவை சென்றடைந்தனர். பொதுமக்கள் இடம்பெயர்ந்தபோது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 70 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
காலக்கெடு நிறைவடைந்த நிலையில் காசா முனை பகுதிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று சென்றார். அங்கு முகாமிட்டுள்ள இஸ்ரேலிய வீரர்களிடம் அவர் பேசும்போது, “அடுத்த கட்டத்துக்கு நாம் தயாராகிவிட்டோம்” என்று தெரிவித்தார். மூத்த தளபதிகளுடன் கலந்துரை யாடினார். இதைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் வடக்கு காசாபகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று இரவு தரைவழி தாக்குதலை தொடங்கியது. சுமார் ஒருலட்சம் இஸ்ரேல் வீரர்கள், 300 பீரங்கிகள் வடக்கு காசா பகுதியில் படிப்படியாக முன்னேறி வருகின்றனர்.
வடக்கு காசா எல்லைப் பகுதிகள் முழுவதும் ஹமாஸ் தீவிரவாதிகள் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளனர். அதோடுதொலைவில் இருந்து குறிதவறாமல் சுடும் வீரர்களும் நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர். இவற்றை எதிர்கொள்ள இஸ்ரேல் ராணுவம், ‘டெடி பீர்' என்றழைக்கப்படும் அதிநவீன புல்டோசர்களை முன்வரிசையில் நிறுத்தி உள்ளது.
26 அடி நீளம், 15 அடி அகலம், 13 அடி உயரம் கொண்ட இந்த புல்டோசர்களில் 2 வீரர்கள் அமர முடியும். கண்ணிவெடிகளால் புல்டோசர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எதிரிகளை சுட்டு வீழ்த்த தானியங்கி துப்பாக்கிகள், சிறிய ரக குண்டுகளை வீசும்பீரங்கி அமைப்புகள், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசும் கருவிகள் உள்ளிட்டவை புல்டோசரில் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த ஆயுதங்கள் மூலம் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி கொண்டே புல்டோசர்கள் முன்னேறி செல்லும். அனைத்து கட்டிடங்களையும் இடித்து தரைமட்டமாக்கும்.
டெடி பீர் புல்டோசர்கள் முன்னே செல்ல இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வடக்கு காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில் நுழைந்து ஹமாஸ் தீவிரவாதிகளின் முகாம்கள், கட்டிடங்களை தரைமட்டமாக்கி வருகின்றனர்.
இஸ்ரேல் எச்சரிக்கை: இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜோனதான் நேற்று கூறும் போது, “பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 1,000 இடங்கள் மீது தாக்குதல்களை நடத்தி உள்ளோம். பெரும்பாலும் காசா பகுதியின் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.காசாவில் இருந்து வெளியேற அங்குள்ள மக்களுக்கு ஏற்கெனவே அறி விப்பு வெளியிட்டு இருந்தோம். இனிமேலும் அங்கிருந்தால் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களில் ஒரே நாளில் 324 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். 1,788 பேர் காயமடைந்தனர்’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பாலஸ்தீன தரப்பு உயிரிழப்பு 2,269 ஆக உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago