டெல் அவிவ்: காசா மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேலை ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் எச்சரித்துள்ளார்.
வடக்கு காசாவில் வசிக்கும் 11 லட்சம் மக்களை அங்கிருந்து வெளியேறி தெற்கு நோக்கி செல்லுமாறு இஸ்ரேல் எச்சரித்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் வாகனங்கள் மற்றும் நடைபயணமாக காசாவை விட்டு வெளியேறி வருகின்றனர். பொதுமக்கள் உள்ளூர் நேரப்படி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இரண்டு வழிகள் மூலம் தெற்கு பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவம் மீண்டும் எச்சரிக்கை: காசாவில் தாக்குதலை விரிவுபடுத்த தயாராகி வருகிறோம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "வான், கடல் மற்றும் நிலம் என அனைத்து பகுதிகளிலும் இருந்து ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த கட்ட போருக்கான குறிப்பாக பெரிய அளவிலான நில வழி தாக்குதலுக்கு பட்டாலியன்கள் மற்றும் இராணுவப் படைகள் தயார்படுத்தப்படுகின்றன" என்று இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேலுக்கு ஈரான் வார்னிங்: காசா மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேலை ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் எச்சரித்துள்ளார். மேலும், லெபனானின் ஹிஸ்புல்லா உடன் மோதினால், மத்திய கிழக்கின் மற்ற பகுதிகளுக்கும் போர் விரிவடையும். அப்படி நடந்ததால் இஸ்ரேல் ஒரு பெரிய பூகம்பத்தை சந்திக்கக்கூடும் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேற மாட்டார்கள் - ஹமாஸ் தலைவர்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினார். அப்போது, காசா பகுதியில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக குற்றம் சாட்டிய அவர், "எங்கள் எதிரியான அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுடன் இதை செய்கின்றனர். காசா மக்கள் தங்கள் நிலத்தில் தங்கியுள்ளனர். அவர்கள் ஒருபோதும் காசாவை விட்டு வெளியேற மாட்டார்கள். எகிப்துக்குத் தப்பிச் செல்ல மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
24 மணி நேரத்தில் 320 பேர் பலி: இதனிடையே, காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இதுவரை 724 குழந்தைகள் உட்பட 2,215 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 8714 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேற்குப் பகுதியில் இதுவரை 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 1,100 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 320 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நகரத்தில் இருந்து வாகனத்தில் வெளியேறும்போது தாக்குதல் நடந்தாக முற்றுகையிடப்பட்ட இடத்தில் இருக்கும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசா நகரை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்ற தனது அறிவிப்பை இஸ்ரேல் திரும்பப் பெற வேண்டும் என்று ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேலின் அறிவிப்பு அபாயகரமானது; மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்று ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.
சோகமான சம்பவம்: இதனிடையே, வெள்ளிக்கிழமை இஸ்ரேல் - லெபனான் எல்லை அருகே நடந்த எல்லை தாண்டிய தாக்குதலில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வீடியோ பத்திரிகையாளர் இஸ்ஸம் அப்துல்லா என்பவர் கொல்லப்பட்டார். மேலும், 6 பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, "அது ஒரு சோகமான விஷயம். நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம். அதுகுறித்து விசாரித்தும் வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கர்கள் வெளியேற அனுமதி: காசாவில் இருக்கும் அமெரிக்கர்கள் சனிக்கிழமை எகிப்தின் ராஃபா வழியாக வெளியேற எகிப்து மற்றும் இஸ்ரேல் அனுமதித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காசாவில் இருந்து வெளியேறும் எகிப்துக்கான குறுக்கு வழியை மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து வைக்க அமெரிக்காவின் இரண்டு தோழமை நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன என்று தெரிவித்தனர்.
ஜீவமரண போராட்டம்: காசாவில் தண்ணீர் தீர்ந்து வருவதால் அங்குள்ள 20 லட்சம் மக்களின் நிலைமை மிகவும் ஆபத்தில் உள்ளது என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா ஏஜென்சி தெரிவித்துள்ளது. "இது ஜீவமரண போராட்டமாக மாறியுள்ளது. காசாவில் நல்ல தண்ணீர் தீர்ந்து விட்டது மக்கள் அழுக்கான கிணற்று நீரை பயன்படுத்தும் நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் நீர் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கும். காசாவில் உள்ள 20 லட்சம் மக்களுக்கு தண்ணீர் கிடைத்திட உடனடியாக மின்வசதி ஏற்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
ஹமாஸ் விமானப் படைத் தளபதி உயிரிழப்பு: வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் விமானப் படைத் தளபதி முராத் அபு முராத் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஹமாஸின் தளபதிகள் பதுங்கி இருந்த நுக்பா உள்பட 12க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. அந்த தளபதிகள்தான், கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதலுக்குக் காரணமானவர்கள். இஸ்ரேலிய தரைப் படையும், விமானப் படையும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
போரில் இணையத் தயாராக இருக்கிறோம்: இதனிடையே, இஸ்ரேலுக்கு எதிரான போரில் சரியான நேரத்தில் ஹமாஸுக்கு ஆதரவாக சேர முழுமையாக தயாராக இருக்கிறோம் என்று ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் போல ஹமாஸும் நசுக்கப்பட வேண்டும்: அதேவேளையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை நசுக்கியதைப் போல் ஹமாஸ் அமைப்பையும் நசுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். முன்னதாக அவர், "காசா தாக்குதல் வெறும் ஆரம்பம்தான் இனி நடப்பதை என்னால் கூட கணித்துச் சொல்ல முடியாது" என்று எச்சரித்திருந்தார்.
பின்புலம்: கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசினர். 1,200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தரை, வான்,கடல் வழியாக இஸ்ரேலின் தென் பகுதியில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இதுவரை 1,300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். 3,300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏராளமான இஸ்ரேலியர்களை, ஹமாஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்து சென்றனர்.
இதற்கு பதிலடியாக ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் போர்தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே 8-வது நாளாக இன்றும் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேலிய பிணைக் கைதிகளை மீட்கவும் ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்கவும் காசா பகுதிக்குள் தரைவழியாக நுழைய இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவத்தின் ஒரு லட்சம் வீரர்கள் தயாராக உள்ளனர். 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. 300 பீரங்கிகள் காசா பகுதியை நோக்கி முன்னேறி வருகின்றன.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் சுமார் 23 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் காசாவின் வடக்கு பகுதியில் மட்டும் சுமார் 11 லட்சம் பேர் வசிக்கின்றனர். வடக்கு பகுதியில்தான் தரைவழியாக நுழைய இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு உள்ளது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தெற்கு பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது.
இதற்கிடையே, ஈரான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் அச்சம் பரவி வருகிறது.
உணவு, குடிநீர் இன்றி காசா மக்கள் பரிதவிப்பு: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் ஐ.நா. சபையின் மூத்த அதிகாரி ஜெனிபர் ஆஸ்டின் கூறியது: “காசா பகுதிக்கான குடிநீர், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்திவிட்டது. ராணுவதாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து காசாமருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். குடிநீர், மின்சாரம், எரிபொருள் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக உள்ளது. நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அறுவைச் சிகிச்சை செய்ய முடியவில்லை.
காசாவில் தற்போது இருப்பில்உள்ள குடிநீர், உணவு பொருட்கள்சில நாட்களுக்கு மட்டுமே போதுமானது. இப்போதே லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் பசியால் வாடுகின்றனர். காசா பகுதி முழுவதும்சாலை, தெருக்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. தொலைத்தொடர்பு வசதி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் 24 மணி நேரத்தில் 11 லட்சம் மக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறது. மிக குறுகிய காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வெளியேறுவது கடினம் .இஸ்ரேல் ராணுவம் மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago