"குண்டு சத்தம் கேட்கும்போதெல்லாம் நான் என் படுக்கைக்குள் நுழைந்துகொள்வேன், அப்போதுதான் என் மேல் குண்டு விழாது என்றது ஒரு குழந்தை. இன்னொரு குழந்தையோ, குண்டு சத்தம் கேட்டால் என் அம்மாவின் கண் பார்வையைவிட்டு அகலமாட்டேன். கழிவறைக்குக்கூட செல்ல மாட்டேன். அவள் பார்வையிலேயே இருந்தால் என் மீது குண்டு விழுந்தாலும் அம்மா காப்பாற்றுவாள் என்றது."
காசாவில் பிறந்து கலிபோர்னியாவில் உளவியல் நிபுணராக பணிபுரியும் ஃப்ரஜல்லா, பாலஸ்தீன குழந்தைகள் மீது போர் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி தாக்கல் செய்த தனது ஆய்வறிக்கையில் பதிவு செய்திருந்த சாட்சிகள்தான் மேலே அடைப்புக் குறிக்குள் உள்ள குழந்தைகளின் வார்த்தைகள்.
காசாவின் குழந்தைகளுக்கு கொடுங்கனவுகளுக்கு மட்டும்தான் பஞ்சமில்லை. காசாவின் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு வேதனைக் கதை இருக்கிறது. காசாவில் மட்டுமல்ல, போர் எங்கு நடந்தாலும் அங்கு பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். அவர்களின் சின்னஞ்சிறு உலகில் ரத்தமும், யுத்த சத்தமும் உடலையும் உள்ளத்தையும் சிதைத்துவிடுகின்றன.
போரில் வீசப்படும் குண்டுகளுக்கும், அகதிகளாக வேறு நாடுகளுக்கு புலம்பெயரும்போது ஏற்படும் பட்டினி, நோய், விபத்து என இன்னும் பல காரணங்களாலும் குழந்தைகள் உயிரிழப்பதும் போரின் பக்கவாட்டு சேதாரங்களில் கவனிக்கப்படாத கோர முகம்.
» இஸ்ரேல் - ஹமாஸ் போர் | சீனாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரிக்கு கத்திக் குத்து
» காசா தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் வேறு முனைகளில் போர் வெடிக்கும்: ஈரான் எச்சரிக்கை
500 குழந்தைகள்... - இதோ ஹமாஸுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தொடங்கியதிலிருந்து அக்டோபர் 12 வரை காசாவில் 500 குழந்தைகள் இறந்துள்ளனர் என்கிறது புள்ளிவிவரம். தலைக்கு மேலே உயரத்தில் போர் விமானங்கள் மட்டுமே வட்டமடிக்க குழந்தைகள் உணவின்றி, தண்ணீரின்றி தவித்து வருவதாக களத்தில் மனிதாபிமான உதவிக்காக முகாமிட்டிருக்கும் அமைப்புகள் வேதனைகளைப் பகிர்கின்றன.
பாலஸ்தீன மனித உரிமைகள் அமைப்பான டிசிஐ (Defense for Children International), கடந்த 2005-ல் இருந்து 2022 வரை காசாவில் நடத்தப்பட்ட 6 பெரிய தாக்குதல்களில் குறைந்தது 1000 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. இப்போது 7 நாட்களில் 500 குழந்தைகள் பலி என்ற செய்தி, போரின் வீரியத்தைச் சொல்கிறது. குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டிய அவசரத்தைச் சொல்கிறது. பாலஸ்தீனத்துக்கான சேவ் தி சில்ட்ரன் அமைப்பின் இயக்குநர் ஜேசன் லீ, "முந்தைய மோசமான அனுபவங்களை வைத்து கணிக்கும்போது இப்போது காசாவில் உள்ள குழந்தைகள் மிகுந்த நடுக்கத்தில் இருப்பார்கள்" என்று கூறியுள்ளார்.
அதை நிரூபிப்பதுபோல் காசா களத்தின் சில காட்சிகள் செய்தி ஊடகங்களில், சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. காயங்களுடன் கதறும் குழந்தைகள். எங்கே இருக்கிறோம்? ஏன் இப்படி இருக்கிறோம்? பெற்றோர், உறவினர்கள் எங்கே?! என எதுவும் தெரியாமல் ஓலமிடும் குழந்தைகள், 'இது நடந்து கொண்டேதான் இருக்கிறது..' என முந்தைய தாக்குதல்களில் தப்பிப்பிழைத்து அதே நம்பிக்கையோடு முகாம்களில் விளையாடிக் கொண்டிருக்கும் சற்று பெரிய குழந்தைகள் எனப் பல காட்சிகள் வெளியாகி வருகின்றன. அவை கடந்து செல்வதற்கான காட்சிகள் அல்ல.
எங்கும் செல்ல முடியாது: காசா முனை என்பது ஒரு சுயாட்சி பெற்ற நிலம். பாலஸ்தீன ஆதரவு இருந்தாலும் கூட பாலஸ்தீன எல்லைக்கு உட்பட்டது இல்லை. காசா வாழ் மக்கள் கடந்த 2007-ஆம் ஆண்டு முதலே எல்லைகளில் கடும் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு இருக்கிறார்கள். கிட்டத்தட்ட துண்டு நிலத்தில் சிக்கிய சிறைவாசிகள் போல. காசாவின் வான், தரை, கடல் எல்லைகள் பெரும்பாலும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. எகிப்தின் ரஃபா பகுதியுடன் மட்டும்தான் எளிமையாக தொடர்பில் இருக்கும் சூழலில் வசிக்கிறார்கள் காசா மக்கள். அப்படியிருக்க இப்போதைய போர் பதற்றத்தால் காசாவின் அனைத்து எல்லைகளிலும் அதீத கெடுபிடிகள் அமலாகியுள்ளன.
முற்றிலும் காசாவுக்குள்ளேயே முடங்கியுள்ள மக்களுக்கு உணவு, தண்ணீர், மின்சார விநியோகம் இல்லை. இதுபோன்ற சூழலில் குழந்தைகள் குடி தண்ணீர் இல்லாமல், சுகாதார கட்டமைப்புகள் இல்லாமல், தட்பவெப்ப சூழலில் குறைந்தபட்ச பாதுகாப்பும் கூட இல்லாமல் சிக்கிக் கொண்டு கடுமையான உடல் வேதனைக்கும் மன வேதனைக்கும் ஆளாகின்றனர்.
முந்தைய காலங்களில் இதுபோன்ற தாக்குதல் வேளைகளில் குழந்தைகள் உயிரை துச்சமென மதித்து உணவு, தண்ணீருக்காக இஸ்ரேல் ராணுவ தாக்குதலுக்கு உள்ளாவோம் என்று தெரிந்தும் கூட சில பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என்று டிசிஐ கூறுகிறது. காசாவில் முன்பு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது ஃப்ளூ காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் குழந்தைகளுக்கு பெரிய சவாலாக இருந்தன. அதேபோன்ற சூழல் இப்போதும் ஏற்படலாம் என்று குழந்தைகள் நல அமைப்புகள் கணிக்கின்றன.
மின்சாரம் இல்லாமல் பகலில் வெயிலிலும் இரவில் குளிரிலும் தவிக்கும் குழந்தைகள் பல உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். உடல் ரீதியாக பட்டினி தொடங்கி தொற்று நோய்கள் வரை அவர்களைத் துரத்துகின்றன. மனரீதியாக வாழ்நாள் முழுவதும் நீங்காத வடுக்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.
பெருந்துயரின் பிடியில் குழந்தைகள்: தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்த, பேசிக் கொண்டிருந்த சக குழந்தை போருக்கு பலியாகி சடலமாகக் கிடப்பதைக் காண்பதைவிட ஒரு குழந்தைக்கு பெரும் மனத்துயரம் இருக்கவே முடியாது எனக் கூறுகிறது சேவ் தி சில்ட்ரன் அமைப்பு. கடந்த 2022 அறிக்கையில் அந்த அமைப்பு இதனை சுட்டிக் காட்டியுள்ளது. காசாவில் உள்ள குழந்தைகள் இதுபோன்ற சோகங்கள், அழுத்தங்கள், அச்சங்களுடன் தான் வாழ்கின்றனர் என்றும் அந்த அமைப்பு குறிப்பிடுகிறது. இப்போது 7 நாட்களுக்குள் 500 குழந்தைகள் இறந்திருப்பது எத்தனை ஆயிரம் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு அழைத்துச் சென்றிருக்கும். சர்வதேச மனநல விழிப்புணர்வு நாளை அண்மையில் அக்.10-ல் தான் இந்த உலகம் அனுசரித்தது.
சேவ் தி சில்ட்ரன் அமைப்பு காசாவில் உள்ள 488 குழந்தைகள் மற்றும் 160 பெற்றோர், பாதுகாவலர்களிடம் கடந்த ஆண்டு ஓர் ஆய்வு நடத்தியது. அதில் 15 ஆண்டுகால தடை குழந்தைகள் மீது எந்த மாதிரியான மனநல பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வு செய்தது. குழந்தைகளில் 84 சதவீதம் பேர் அச்சத்துடன் இருப்பதாகக் கூறினர். 80 சதவீதம் பேர் பதற்றத்துடன் உள்ளதாகக் கூறினர். 78 சதவீதம் பேர் பயமாக இருப்பதாகவும், 77 சதவீதம் பேர் சோகமாக இருப்பதாகவும் கூறினர். இத்தகைய பல்வேறு விதமான உணர்வுகளால் 79 சதவீத குழந்தைகளுக்கு இரவில் தூக்கத்தில் படுக்கையிலேயே சிறுநீர் வெளியேறும் நோய் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 59 சதவீத குழந்தைகள் பேசுவதற்கு விரும்புவதில்லை. 48 சதவீத குழந்தைகளுக்கு கவனச் சிதறல் இருக்கின்றது.
10 வயதான மோமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இஸ்ரேல் குண்டு வீச்சில் தன் கண் முன்னால் ஒருவர் துண்டு துண்டாக சிதறிப் போனதைப் பார்த்ததில் இருந்து இரவில் கொடுங்கனவுகளால் துன்பங்களை அனுபவிக்கிறான். 15 வயது சாராவுக்கு காசாவுக்கு வெளியில் மருத்துவ சிகிச்சை செய்ய அவசியமிருக்கிறது. ஆனால், அவளது பெற்றோருக்கு காசாவைவிட்டு வெளியே செல்ல அனுமதியில்லை. 8 வயது பஷீமுக்கு குண்டுவீச்சில் பார்வை பறிபோய்விட்டது. இந்த ரணங்கள் தரும் மன உளைச்சல்கள் உலக மனநல நாளில் விவாதிக்கப்பட வேண்டிய பேசுபொருள் அல்லவா?
கனவாகிப் போகும் கல்வி: உணவு, உறைவிடம் போன்ற அடிப்படைகளே எட்டாக்கனியாக இருக்கும் பகுதியில் கல்விக்கு ஏது வாய்ப்பு. இஸ்ரேல் எல்லையை ஒட்டியிருக்கும் காசா பள்ளிகளில் பாடத்துடன் போர்த் தாக்குதலின்போது பதுங்கிக் கொள்வது எப்படி என்பது பற்றியும் வகுப்பெடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு கல்வி கற்க ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், கல்வி இன்னும் அங்கே கனவு தான்.
பொதுவாக போர்க்காலங்களில் பள்ளிகளில் மக்கள் தஞ்சமடைவது வழக்கம். பாலஸ்தீன் அகதிகளுக்கான ஐ.நா. நடத்தும் 64 பள்ளிகள் அவ்வாறான நேரங்களில் மக்கள் தஞ்சம் புகும் இடங்கள். ஆனால், அண்மைக்காலமாக பள்ளிகள் கூட பாதுகாப்பான இடங்களாக இல்லை அவர்களுக்கு. கடந்த செவ்வாய்க்கிழமை அல் ஃபக்கூரா எனும் பள்ளிக்கூடம் வான்வழித் தாக்குதலில் தரைமட்டமானது. கல்விக்காக மட்டுமல்ல பாதுகாப்புக்காகக் கூட ஒதுங்க முடியாத இடங்களாகத் தான் கல்வி நிலையங்கள் இருக்கின்றன.
ஊட்டச்சத்து குறைபாடுகள், உடல்நல பாதிப்புகள், போர்க் காயங்கள், கல்வியின்மை, தொற்றுநோய்கள் இவைதான் காசாவில் உள்ள பாலஸ்தீனக் குழந்தைகளின் உலகில் நிரம்பியிருக்கின்றன. போரின் முடிவுரை தோல்வி மட்டும்தான் என்பதை எல்லோரும் உணரும்வரை இன்னும் பல தலைமுறைகள் ஏதுமற்ற தொகையால் நிரம்பும்.
- உறுதுணைக் கட்டுரை: அல்ஜசீரா | தமிழில்: பாரதி ஆனந்த்
முக்கிய செய்திகள்
உலகம்
25 mins ago
உலகம்
10 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago