“பாலஸ்தீனத்துக்கு எதிரான போர்க் குற்றங்களை நிறுத்த வேண்டும்” - ஈரான், சவுதி தலைவர்கள் ஆலோசனை

By செய்திப்பிரிவு

ரியாத்: ஹமாஸ் - இஸ்ரேல் போர் குறித்து ஈரான் நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி, சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருவரும் தொலைபேசியில் விவாதித்துள்ளனர். உலக அரங்கில் மிக முக்கியமான நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள ஈரானிய அரசு ஊடகம், "பாலஸ்தீனத்துக்கு எதிரான போர்க் குற்றங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்" என இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிவித்துள்ளது. அப்போது, "நடந்துகொண்டிருக்கும் போரினை தடுக்க சர்வதேச அளவில் சவுதி புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது" என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியிடம் உறுதியளித்தார் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதையும் சவுதி விரும்பவில்லை" என்றும் ஆலோசனையில் முகமது பின் சல்மான் கூறியிருக்கிறார். சவுதி மற்றும் ஈரான் இடையேயான இந்தப் பேச்சுவார்த்தைகள் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில், ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு ஷேக் அல் நிமர் உட்பட 47 பேருக்கு 2016-ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த மரண தண்டனை பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஷியா பிரிவு முஸ்லிம்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழும், மேற்காசிய நாடான ஈரானிலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்த தவறவில்லை. இதனால், சவுதி - ஈரான் உறவில் விரிசல் ஏற்பட ஒருகட்டத்தில், ஈரான் உடனான உறவை முறித்துக் கொள்வதாக சவுதி அரேபியா பகிரங்கமாக அறிவித்தது.

இரு நாடுகளையும் மீண்டும் இணைக்க உலக நாடுகள் பலவும் ஆர்வம் காட்டின. இதன்பின் கடந்த மார்ச் மாதம் சீனா இரு நாடுகளுக்கும் மத்தியஸ்தம் செய்துவைத்தது. அதன்படி, ஈரானும், சவுதி அரேபியாவும் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டன. தொடர்ந்து இரு நாடுகளிலும் அடுத்த இரண்டு மாதங்களில் தூதரகங்களை திறக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த சமாதானங்களுக்கு பிறகு முதல் முறையாக இருநாட்டு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். இதனால் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் விவகாரத்தில் மேலும் சர்வதேச கவனம் விழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE