இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் மீண்டும் தாக்குதல்: இரு தரப்பு பலி 1,800 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

காசா: காசாவில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் ஆயுதப் படை அமைப்பினர் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றன. முன்னதாக, பாலஸ்தீன குடிமக்களை நாட்டைவிட்டு வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்த ஹமாஸ் குழு, தெற்கு இஸ்ரேலிய நகரமான அஷ்கெலோனை குறிவைத்து ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேநேரம், காசா நகரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 830 ஆக அதிகரித்துள்ளதாகவும், 4,250 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் தாக்குதலால் காயமடைந்தவர்கள் காசா மருத்துவமனைகளில் குவிந்துவருகின்றனர். குறைந்த எண்ணிக்கையிலேயே காசாவில் மருத்துவமனைகள் இருபப்தால், ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மருத்துவ உதவி கிடைக்காமல் ஏராளமானோர் தவித்து வரும்நிலையில் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம், உலக சுகாதார அமைப்பிடம் மனிதாபிமான உதவிகளை கோரியுள்ளது. இதற்கிடையே, போர் முடியும் வரை இஸ்ரேலிடம் இருந்து பணயக் கைதிகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று ஹமாஸ் பயங்கரவாதக் குழு அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உதவி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத், இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு 20 மில்லியன் டாலர் அவசர உதவியாக அனுப்ப உத்தரவிட்டுள்ளார். பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகமை மூலமாக இந்த உதவிகள் வழங்கப்படும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக் பிரதமர் குற்றச்சாட்டு: ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தொடர்பாக பேசுகையில், "காசாவில் சண்டை மேலும் தீவிரமடைவது முற்றுகையிடப்பட்ட பகுதிகளை அழிக்க வழிவகுக்கும். பாலஸ்தீனத்தில் இப்போது கடினமான மற்றும் ஆபத்தான நிகழ்வுகள் நடந்துவருகின்றன. பாலஸ்தீனியர்களின் உரிமைகளை இஸ்ரேல் மீண்டும் மீண்டும் மீறுவதன் இயல்பான விளைவுதான் இது. சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானங்களின்படி தனது கடமைகளை நிறைவேற்ற முடியாமல் சர்வதேச சமூகம் மௌனமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

லெபனானில் இருந்தும் தாக்குதல்: ஒருபுறம் காசாவில் இருந்து ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், லெபனானில் இருந்தும் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இஸ்ரேலின் வடக்கு பகுதியை குறிவைத்து லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் நடத்திவருகின்றனர். செவ்வாய்க்கிழமை மாலை ராக்கெட் வீச்சை ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேலிய ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

இதுவரை பலி 1,830: கடந்த சனிக்கிழமை முதல் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது நடத்தி வரும் கடும் தாக்குதல்களால் இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1000 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வழித் தாக்குதல்களால் காசா பகுதியில் வாழ்ந்து வந்த பாலஸ்தீன நாட்டு மக்கள் சுமார் 830 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். இதனிடையே, பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இதுவரை சுமார் 1.20 லட்சம் பொதுமக்கள் வெளியேறியுள்ளனர்.

இஸ்ரேல் எச்சரிக்கை: “போரை நாங்கள் தொடங்கவில்லை ஆனாலும் நாங்கள் அதை முடித்து வைப்போம்” என்று ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எச்சரித்துள்ளார். நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், "இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது. போரை நாங்கள் விரும்பவில்லை. மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டுதனமான முறையில் அது எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. எங்களைத் தாக்கியதன் மூலம் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை ஹமாஸ் செய்துவிட்டார்கள் என்பதை நாங்கள் அவர்களுக்கு புரியவைப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தகவல்: ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போர் குறித்த சமீபத்திய தகவல்களை, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கினார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘தற்போதைய நிலை குறித்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு நன்றி. கடினமான இந்த தருணத்தில் இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் தங்கள் உறுதியான ஆதரவை அளித்து வருகிறார்கள். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் இந்தியா உறுதியாக கண்டிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

காசா மீது பெரும் தாக்குதலை இஸ்ரேல் படைகள் திங்கள்கிழமை மேற்கொண்டன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காசா பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் இஸ்ரேல் ராணுவம் கொண்டு வந்துள்ளது. “காசா பகுதி, தெற்கு எல்லையோரப் பகுதிகளில் நாங்கள் பெரும் தாக்குதலை நடத்தினோம். இதன்மூலம் காசா பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு எரிபொருள், உணவு, மின்சார வசதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு நாங்கள் மனிதர்களோடு போரிடவில்லை. மிருகங்களோடு போரிடுகிறோம். அதற்கு ஏற்றவாறு நாங்கள் செயல்படுகிறோம். காசா முழுமையாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பதை இப்போது அறிவிக்கிறோம்” என்று இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) மக்கள்தொகை அதிகம் உள்ள காசா பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவதாக சமூக ஊடகங்களில் பல புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதுகுறித்த முழு விவரம் > காசா மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் வீசுவதாக குற்றச்சாட்டு - இதன் மோசமான தாக்கம் என்ன?

போரின் பின்புலம்: இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதியாக காசா அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரின் படை தன்னாட்சி செய்து வருகிறது. இதற்கு பாலஸ்தீனம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், அவ்வப்போது காசா எல்லையைக் கைப்பற்ற இஸ்ரேல் பலமுறை தாக்குதல்களை நடத்தியுள்ளது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE