ஆப்கன் நிலநடுக்கம் | பலி எண்ணிக்கை 4,000 ஆக உயர்வு; 2,000 வீடுகள் தரைமட்டம்

By செய்திப்பிரிவு

காபூல்: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏறக்குறைய 2000க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாக ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (ANDMA) தெரிவித்துள்ளது. இது குறித்து தலைநகர் காபூலில் பேசிய ANDMA செய்தித் தொடர்பாளர் முல்லா சாதிக், இதுவரை கிடைத்த புள்ளி விவரங்களின்படி, பலி எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளதாகவும் சுமார் 20 கிராமங்களில் 1,980 முதல் 2,000 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளதாகவும் கூறினார்.

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை (அக். 07) காலை 11 மணி முதல் 12 மணி வரை அடுத்தடுத்து 4 முறை பூகம்பங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அலகில் 5.5, 5.9, 6.2, 6.3 என்று பதிவாகின. தொடர்ந்து பலமுறை நிலஅதிர்வுகளும் ஏற்பட்டன. இந்த பூகம்பத்தால் ஹெராத் பகுதியில் 20 கிராமங்கள் முழுமையாக நாசமாகின. 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. 35 மீட்புக் குழுக்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE