''அவர்கள் தொடங்கினார்கள், நாங்கள் முடித்துவைப்போம்'' -ஹமாஸை எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்

By செய்திப்பிரிவு

டெல் அவிவ்: "போரை நாங்கள் தொடங்கவில்லை ஆனாலும் நாங்கள் அதை முடித்து வைப்போம்" என்று ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையில் நடந்துவரும் போரில் பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் சுமார் 3,00,000 துருப்புகளை குவித்துள்ளது. கடந்த 1973ம் ஆண்டு நடந்த யோம் குப்புர் போருக்கு பிறகு இஸ்ரேல் 4,00,000 ரிசர்வ் வீரர்களை அழைத்துள்ளதாக டைம் பத்திரிக்கைத் தெரிவித்துள்ளது. இதனிடையே, நாட்டுமக்களிடம் உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, "இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது. போரை நாங்கள் விரும்பவில்லை. மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டுதனமான முறையில் அது எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. போரை நாங்கள் தொடங்கவில்லை என்றாலும் நாங்கள் அதனை முடித்து வைப்போம்.

எங்களைத் தாக்கியதன் மூலம் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை ஹமாஸ் செய்துவிட்டார்கள் என்பதை நாங்கள் அவர்களுக்கு புரியவைப்போம். இன்னும் பல தசாப்தங்களுக்கு ஹமாஸ்களும் இஸ்ரேலின் பிற எதிரிகளும் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு சரியான விலையை நாங்கள் கொடுப்போம். குடும்பங்களை வீடுகளில் வைத்துக் கொன்றது, இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை படுகொலைச் செய்தது. குழந்தைகள், பெண்கள், முதிவர்களை கடத்துவது, குழந்தைகளை கட்டிப்போட்டு தூக்கிலிட்டு எரித்தது என அப்பாவி இஸ்ரேலியர்கள் மீது ஹமாஸ் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மனதை உலுக்குகிறது. ஹமாஸ்கள் காட்டுமிராண்டிகள். ஹமாஸ்கள் ஐஎஸ்ஐஎஸ் போன்றவர்கள். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை ஒடுக்க நாகரீக சமூகம் ஒன்றிணைந்தததைப் போல ஹமாஸ்களை ஒழிக்க நாகரீக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன். இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்கா அளித்துவரும் வாக்குறுதிகள் மற்றும் அர்ப்பணிப்புக்கு மீண்டும் ஒருமுறை இஸ்ரேல் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முன்னெப்போதுமில்லாத அளவுக்கு இஸ்ரேலுக்கு ஆதரவு தரும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹமாஸ்களுக்கு எதிரான போரில் இஸ்ரேல் தனது சொந்த மக்களுக்காக மட்டும் போராடவில்லை. காட்டுமிராண்டிதனத்துக்கு எதிராக நிற்கும் அனைத்து நாடுகளுக்காவும் போராடுகிறது. இந்தப்போரில் இஸ்ரேல் வெல்லும், அவ்வாறு இஸ்ரேல் வெல்லும் போது ஒட்டுமொத்த நாகரிக சமூகமும் வெற்றிபெறும்" இவ்வாறு நேதன்யாகு தெரிவித்தார்.

காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. ஏவுகணைகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 900க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர்கள் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மட்டும் 260 பேர் கொல்லப்பட்டனர். எல்லையை ஒட்டிய பகுதிகளைச் சேர்ந்த பலரை ஹமாஸ் பயங்கரவாதிகள் கடத்திச் சென்று கொன்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE