ராக்கெட் குண்டுகள் வீசி பாலஸ்தீன தீவிரவாதிகள் தாக்குதல் - இஸ்ரேல் எல்லையில் போர் பதற்றம் | முழு விவரம்

By செய்திப்பிரிவு

காசா: பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று காலை இஸ்ரேல் மீது 5,000 ராக்கெட் குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 70 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் பாலஸ்தீனத்தில் 198 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி கடந்த 2007-ம் ஆண்டு ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போதிருந்து இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே பல மோதல்கள் நடந்துள்ளன. காசா எல்லையில் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் ராணுவம் மோதிக் கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடைபெறும். இந்தாண்டு நடந்த மோதலில் பாலஸ்தீனர்கள் 247 பேரும், இஸ்ரேலியர்கள் 32 பேரும், வெளிநாட்டினர் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

பாலஸ்தீனர்களின் ஊடுருவலை தடுக்க காசா எல்லையை மூடும் நடவடிக்கையை இஸ்ரேல் அரசு தொடங்கியது. இது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஹமாஸ் அமைப்பினர் நேற்று முன்தினம் விடுத்த செய்தியில், ‘‘பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து குற்றம் புரிந்து வருகிறது. ஜெருசலேமில் உள்ள அல்-அக் ஷா புனித தலத்தில் இஸ்ரேலின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்ட மக்கள் எல்லைக் கோட்டை வரையறுக்க வேண்டும்’’ என்றனர்.

புனித நாளில் தாக்குதல்: இஸ்ரேல் மீது அரபு நாடுகள் கடந்த 1973-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தின. அன்றைய தினம் யூதர்களின் காலண்டரில் மிகவும் புனிதமான நாள் ஆகும். இந்த தாக்குதலின் 50-ம் ஆண்டை முன்னிட்டு நேற்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

‘ஆபரேஷன் அல்-அக் ஷா ஃபிளட்’ என்ற பெயரில் தாக்குதலை தொடங்கிய ஹமாஸ் தீவிரவாதிகள் சுமார் 20 நிமிடங்களில் இஸ்ரேலை நோக்கி 5,000 ராக்கெட் குண்டுகளை வீசினர். இந்த குண்டுகள் இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் விழுந்து வெடித்தன. இஸ்ரேலின் ஆஸ்கெலான் கடற்கரை நகரில் பல வாகனங்கள் ராக்கெட் குண்டு வீச்சில் தீப்பற்றி எரிந்தன. இதையடுத்து ஜெருசலேம் நகரில் போர் எச்சரிக்கை விடுக்கும் அபாய ஒலிகள் ஒலிக்கப்பட்டன. காசா எல்லை அருகே வசிக்கும் மக்கள் வீட்டுக்குள் இருக்கும்படியும், பாதுகாப்பான இடங்களில் தங்கும்படியும் இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியது.

ராக்கெட் குண்டு தாக்குதலுக்குப் பிறகு தயார் நிலையில் இருந்த ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் மோட்டார் சைக்கிள், வாகனங்கள் மற்றும் பாரா கிளைடர்கள் மூலம் இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள கிபுட்ஸ் பீரி, ஸ்டெராட் உட்பட பல நகரங்களுக்குள் ஊடுருவினர். தரைவழியாகவும், கடல்வழியாகவும், வான் வழியாகவும் ஊடுருவிய ஹமாஸ் படையினர் மக்கள் மீதும், ரோட்டில் சென்ற கார்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்கள் இஸ்ரேல் வீரர்கள் சிலரை பிடித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் வீரர் ஒருவரை ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் காசா எல்லைக்குள் இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. முகமூடி அணிந்திருந்த ஹமாஸ் தீவிரவாதிகள் சிலர் இஸ்ரேல் மக்களின் வீடுகளுக்குள் நுழைய முயன்றனர். இதனால் மக்கள் ராணுவ உதவியை நாடினர். இஸ்ரேலின் எரஸ் பகுதியில் நுழைந்த ஹமாஸ் படையினர் இஸ்ரேலியர்கள் 50 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இந்த தாக்குதலின்போது இஸ்ரேலில் 70 பேர் உயிரிழந்தனர். 908 பேர் காயம் அடைந்தனர்.தாக்குதல் நடவடிக்கை தொடங்கியதும், இஸ்ரேலின் காசா எல்லையை ஒட்டியுள்ள மக்கள் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். காசா எல்லையில் உள்ள ஹமாஸ் அமைப்பின் 4 தலைமையகங்கள் மற்றும் 17 முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் காசா எல்லையில் 198 பேர் உயிரிழந்ததாக வும், 1,610 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது தெய்ப் கூறும்போது, ‘‘ஆபரேஷன் அல்-அக் ஷா ஃபிளட்’’ நடவடிக்கையை ஹமாஸ் படை தொடங்கியுள்ளது. முதல் 20 நிமிட தாக்குதலில் 5,000 ராக்கெட் குண்டுகளை வீசினோம். இஸ்ரேல் ராணுவ முகாம்கள், விமான நிலையங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. கட வுளின் துணையுடன் அனைத்துக்கும் முடிவுகட்ட முடிவெடுத்துள்ளோம். பொறுப்பு இல்லாத பொறுப்பற்ற காலம் முடிந்துவிட்டது என்பதை எதிரிகள் உணர வேண்டும். ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மசூதியில் பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தற்போது பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், ‘‘இஸ்ரேல் போருக்கு தயாராகி விட்டது. இஸ்ரேல் மீதான இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீனம் இதற்கு முன் இல்லாத வகையில் விலை கொடுக்கும்’’ என்றார்.

இந்திய தூதரகம் அறிவுறுத்தல்: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம். பாதுகாப்பான இடங்களுக்கு அருகே தங்க வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்