நார்வே எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

By செய்திப்பிரிவு

ஸ்டாக்ஹோம்: நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஜான் பாஸ் (64) இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. கடந்த 2-ம் தேதி முதல்மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றுக்கான நோபல்பரிசுகள் அடுத்தடுத்த நாட்களில்அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஜான் பாஸுக்கு அறிவிக்கப்பட்டது.

கடந்த 1959-ம் ஆண்டில் நார்வேநாட்டின் ஹாஜேசண்ட் பகுதியில் ஜான் பாஸ் பிறந்தார். 7 வயதில் மிகப்பெரிய விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். இந்த விபத்து அவரது வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தி பிற்காலத்தில் எழுத்தாளராக உருவெடுக்கச் செய்தது. கடந்த 1983-ம் ஆண்டில் அவரது முதல் நாவல் ரெட்- பிளாக் வெளியானது.

70-க்கும் மேற்பட்ட படைப்புகள்: இதைத் தொடர்ந்து நாவல், கவிதை, கட்டுரை, நாடகம் என 70-க்கும் மேற்பட்ட படைப்புகளை அவர் உருவாக்கி உள்ளார். அவரது முக்கிய படைப்புகள் சுமார் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. டெல்லி டெலிகிராப் நாளிதழ் வெளியிட்ட உலகின் 100 அறிவுஜீவிகளில் எழுத்தாளர் ஜான் பாஸ் 83-வது இடத்தைப் பிடித்தார். அவருக்கு 2023-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ஸ்வீடிஷ் அகாடமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மனித உணர்வுகளை தனது படைப்புகளின் மூலம் தத்ரூபமாக வெளிப்படுத்தியவர் ஜான் பாஸ். இதன்காரணமாக அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது" என்று கூறப்பட்டிருக்கிறது.

எழுத்தாளர் ஜான் பாஸ் கூறும்போது, “எனக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கான விருது கிடையாது. இலக்கிய உலகத்துக்கான விருது" என்று தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த ஆண்டு அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. இதுவரை 120 பேருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 17 பேர் மட்டுமே பெண்கள் ஆவர். இதுதொடர்பாகவும் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இன்று அமைதிக்கான நோபல்: உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு இன்று வெளியிடப்பட உள்ளது. உக்ரைன் போர் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு முக்கியத்துவம் பெற்றுள்ளது. வரும் 9-ம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE