உக்ரைன் கிராமத்தில் ரஷ்யா பயங்கர தாக்குதல்: 51 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

குப்யான்ஸ்க்: உக்ரைன் நாட்டின் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள கார்கிவ் என்ற பகுதிக்கு உட்பட்ட குப்யான்ஸ்க் நகருக்கு அருகில் உள்ள ஹ்ரோசா (Hroza) என்ற கிராமத்தில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் சுமார் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதனை உக்ரைன் அரசு உறுதி செய்துள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைன் நாட்டின் ஹ்ரோசா கிராமத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகள் கண்டனம்: உயிரிழந்தவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள் என்பதால் உலக நாடுகள் ரஷ்யாவின் இந்த பயங்கர தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளன. அமெரிக்கா, மால்டோவா, எஸ்டோனியா போன்ற நாடுகள் இந்த தாக்குதலுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்த போரில் உக்ரைன் பக்கம் இருப்பதை இந்நேரத்தில் இந்த நாடுகள் உறுதியும் செய்துள்ளன.

ஹ்ரோசாவின் சூப்பர் மார்க்கெட் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து உக்ரைன் மேற்கொண்ட மீட்பு பணியில் 51 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. “ரஷ்யாவின் இந்த பயங்கர தாக்குதல் உக்ரைன் மக்களை திகிலூட்டுவதாக உள்ளது. இதனால்தான் உக்ரைனுக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்” என வெள்ளை மாளிகை தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் போர் குற்றமாகும். ரஷ்ய நாட்டின் அட்டூழியத்துக்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாக உள்ளது” என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார். “ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனத்தை இந்த தாக்குதல் விளக்குகிறது. இந்த போருக்கு தனிநபரான புதின் மட்டுமே காரணம்” என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹ்ரோசா கிராமம்: கடந்த 2020-ல் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஹ்ரோசா கிராமத்தில் 501 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது போருக்கு முன்னதாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பு. இந்த எண்ணிக்கை போருக்கு பின்னர் குறைந்திருக்க வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் ஹ்ரோசா கிராமத்தின் மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதம் பேர் தற்போது இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட இந்த கிராமத்தில் ராணுவ முகாம் உட்பட எந்தவித ராணுவ நடமாட்டமும் இல்லை என உக்ரைன் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE