எல்இடி விளக்கு, அறுவை சிகிச்சைக்கு உதவும் குவான்ட்டம் துகளை கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

By செய்திப்பிரிவு

ஸ்டாக்ஹோம்: குவான்ட்டம் துகளை கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகள் இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்தவர் ஆல்பிரட் பெர்னார்டு நோபல். வேதியியலாளர், பொறியாளர், தொழிலதிபர் என பல்வேறு முகங்களைக் கொண்ட இவரின் உயில்படி 1901-ம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி ஆகிய 5 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. 1968 முதல் பொருளாதாரத்துக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகளை கடந்த 2-ம் தேதி முதல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்சஸ் அமைப்பு அறிவித்து வருகிறது. முதல் நாளில் மருத்துவம், 2-வது நாளில் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 3-ம் நாளான நேற்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதன்படி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மவுங்கி ஜி பவெண்டி (62), அமெரிக்காவின் லூயிஸ் இ புருஸ் (80), ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சி ஐ எகிமோவ் (78) ஆகிய 3 பேருக்கு இந்த பரிசு (ரூ.8.32 கோடி) பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குவான்ட்டம் புள்ளிகள் என்றழைக்கப்படும் குறு துகள்களை கண்டுபிடித்ததற்காக இவர்கள் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி பெட்டி, எல்இடி விளக்குகளில் ஒளியை பரவச் செய்யவும் உடலில் உள்ள கட்டிகளை அகற்றுவதில் அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு வழிகாட்டவும் இந்த குறுதுகள்கள் பயன்படுகின்றன. பவெண்டி அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

லூயிஸ் புருஸ் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த நானோகிரிஸ்டல்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தில் அலெக்சி எகிமோவ் பணியாற்றி வருகிறார்.

ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான வரும் டிசம்பர் 10-ம் தேதி, ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெறவுள்ள விழாவில் மன்னர் கார்ல் 16-ம் குஸ்டாப் நோபல் பரிசுகளை வழங்க உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE