பாகிஸ்தான் மசூதிகளில் குண்டுவெடிப்பு: 57 பேர் உயிரிழப்பு; 60 பேர் காயம்

By செய்திப்பிரிவு

கராச்சி: பாகிஸ்தானில் நேற்று இரு இடங்களில் குண்டு வெடித்ததில் 57 பேர் உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள அல்ஃபலா சாலையில் மதீனா மசூதி உள்ளது. இங்கு மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு, நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாட முஸ்ஸிம்கள் நேற்று கூடியிருந்தனர். இவர்கள் ஊர்வலமாகப் புறப்படுவதற்கு ஆயத்தமான நிலையில், தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் காவல் அதிகாரி ஒருவர் உட்பட 52 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தொடர்ந்து, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள், குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்.

மற்றொரு தாக்குதல்...: இந்த தாக்குதலுக்கு அடுத்த சில மணி நேரத்தில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஹங்கு மாவட்டத்தில் ஒரு மசூதியில் குண்டு வெடித்தது. மசூதியில் 30 முதல் 40 பேர் வரை தொழுகையில் ஈடுபட்டிருந்த நிலையில், குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானில் நேரிட்ட இந்தஇரு குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் மொத்தம் 57 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களுக்கு பாகிஸ்தானின் இடைக்கால உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் அகமது பக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறும்போது, “பலுசிஸ்தானில் அமைதியும், மத நல்லிணக்கமும் நிலவுவதை எதிரிகள் விரும்பவில்லை. அதை அழிக்க நினைக்கின்றனர். மிலாது நபி ஊர்வலத்தில் பங்கேற்க வந்த அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இது தாங்கமுடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத சக்திகள் எந்த சலுகைக்கும் தகுதியானவர்கள் அல்ல. தீவிரவாத செயல்களை முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாது” என்றார்.

பாதுகாப்பு அதிகரிப்பு: குண்டுவெப்புக்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்யும்படி, பலுசிஸ்தான் மகாண முதல்வர் அலி மர்தான் டோம்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தாக்குதல்களுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE